Published : 12 Jun 2015 08:34 AM
Last Updated : 12 Jun 2015 08:34 AM

பங்குச்சந்தை, நிதி மேலாண்மை புதிய பாடம்: சிபிஎஸ்இ 9, 10-ம் வகுப்புகளில் அறிமுகம்

பங்குச்சந்தை, நிதி மேலாண்மை பற்றிய புதிய விருப்பப் பாடம் சிபிஎஸ்இ 9, 10-ம் வகுப்புகளில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது.

தற்போதைய சூழலுக்கு ஏற்ப புதிய பாடங்களை அறிமுகப்படுத்துவதில் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பள்ளிகள் முன்னிலையில் உள்ளன. கடந்த 2007-ம் ஆண்டு இந்திய தேசிய பங்குச் சந்தை உதவியுடன் 11, 12-ம் வகுப்பில் நிதிச்சந்தை மேலாண்மை என்ற புதியபாடத்தை சிபிஎஸ்இ அறிமுகப்படுத்தியது. இதற்கு மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், 21-ம் நூற்றாண்டில் பள்ளி மாணவர் களுக்கு எந்த அளவுக்கு கணினித்திறன் முக்கியமோ அதே அளவுக்கு நிதி மேலாண்மைத்திறனும் அவசியம் என்று சிபிஎஸ்இ கருதுகிறது. மேலும், தற்போது வங்கி, நிதிச்சேவை, காப்பீடு உள்ளிட்ட துறைகளில் முறையாகப் பயிற்சி பெற்றவர்கள் போதிய அளவுக்கு கிடையாது. எனவே, இத்துறையில் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்கும் வகையிலும் நிதி மேலாண்மை குறித்த அடிப்படை அறிவை பள்ளி அளவிலேயே மாணவர்கள் பெறும் வகையிலும் 9, 10-ம் வகுப்புகளில் பங்குச்சந்தை, நிதி மேலாண்மை தொடர்பான புதிய விருப்பப் பாடத்தை சிபிஎஸ்இ இந்த ஆண்டு அறிமுகப்படுத்துகிறது.

அதன்படி, 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு நிதி மேலாண்மை பற்றிய அடிப்படை விஷயங்கள் என்பது ஒரு பாடமாகவும், அதேபோல், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நிதிச்சந்தை மேலாண்மை ஒரு பாடமாகவும் இருக்கும். இரு பாடங்களுமே விருப்பப் பாடங்கள் ஆகும். இதில் 60 மதிப்பெண் கருத்தியல் தேர்வுக்கும் (தியரி), 40 மதிப்பெண் செய்முறைப் பயிற்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பாடங்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டு சிபிஎஸ்சி-யும் இந்திய தேசிய பங்குச்சந்தையும் இணைந்து சான்றிதழை வழங்கும்.

மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஏற்கெனவே பணிபுரிந்துவரும் பொருளாதார, வணிகவியல் ஆசிரியர்களுக்கு இதற்காக பிரத்யேகப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த புதிய பாடத்தை அறிமுகம் செய்ய விரும்பும் பள்ளிகள் ஜூன் 30-ம் தேதிக்குள் தங்களின் விருப்பத்தை தெரியப்படுத்துமாறு அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் இயக்குநர் (தொழிற்கல்வி) தகவல் அனுப்பியுள்ளார்.

உயர் அதிகாரி தகவல்

இது குறித்து சிபிஎஸ்இ சென்னை மண்டல உதவி செயலாளர் சீனிவாசனிடம் கேட்டபோது, “ஏற்கெனவே முன்பு 11, 12-ம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட நிதிச்சந்தை மேலாண்மை பாடத்தை தொடர்ந்து தற்போது 9, 10-ம் வகுப்பில் இந்த புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இப்புதிய பாடத்தை மாணவர்கள் விரும்பினால் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x