Published : 01 Jun 2015 03:00 PM
Last Updated : 01 Jun 2015 03:00 PM
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ரத்த வங்கியில், கோடை காலம் என்றாலே ரத்த தானங்கள் குறைந்து விடுகின்றன. எனவே பொதுமக்கள் அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வரவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் கேரள எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு மருத்துவ சேவை வழங்குகிறது பொள்ளாச்சி அரசு மருத்துவமனை. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியிருப்பதால் இங்கு விபத்து சிகிச்சைக்காக வருபவர்களும், வால்பாறை உள் ளிட்ட பகுதியிலிருந்து மேல்சிகிச் சைக்காக வருபவர்களும் ஏராளம்.
அவசர சிகிச்சைகளுக்கும், மகப்பேறு மருத்துவத்துக்கும் ரத்தம் இருப்பு வைக்க வேண்டியது அவசியம் என்பதால் 1995-ல் இங்கு ரத்த வங்கி அமைக்கப்பட்டது. பெரும்பாலும் கிராமப்புறங்களையே நம்பியிருந்தாலும் 2004 மற்றும் 2006-ம் ஆண்டில் அதிகளவு ரத்தம் சேகரித்ததற்காக, மாநில அரசின் விருதைப் பெற்றது. கடந்த ஆண்டு கூட, 3 ஆயிரம் யூனிட்டைக் கடந்து சாதனை படைத்தது. இப்படி பல பெருமைகள் இந்த ரத்த வங்கிக்கு உண்டு.
ஆனால், ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை விடப்படும்போது, இந்த ரத்த வங்கியில் இருப்பு வைக்கப்படும் ரத்தத்தின் அளவு குறைந்து விடுகிறது. இந்த ஆண்டும் இதே நிலைதான். நேற்றைய நிலவரப்படி 30 யூனிட் ரத்தம் மட்டுமே ரத்த வங்கியில் இருந்தது. அதில் தயார் நிலையில் 13 யூனிட் மட்டுமே இருந்தது. இதையறிந்த குள்ளிச்செட்டிபாளையம், நேதாஜி இளைஞர் நற்பணி இயக்கத்தினர் தாமாக முன்வந்து 20 யூனிட் ரத்தத்தை தானமாக வழங்கினர். இதனால் ஓரளவுக்கு நிலைமை சீரடைந்தது.
ஆண்டுதோறும் அதிக அளவு ரத்தத்தை தானமாகப் பெற்று சாதனை செய்து வரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ரத்த வங்கி, கோடை காலத்தில் மட்டும் தொடர்ந்து தடுமாறி வருகிறது.
மாணவர்கள் பங்களிப்பு 70%
இது குறித்து விசாரித்தபோது, ‘பொள்ளாச்சியை ஒட்டியுள்ள ஆனைமலை, கிணத்துக்கடவு, உடுமலை ஆகிய பகுதிகளில் தனியார் கல்லூரிகள் ஏராளமான உள்ளன. கல்லூரிகளில் உள்ள மாணவர் அமைப்புகளே, அரசு மருத்துவமனைக்கு பெருமளவு ரத்த தானம் செய்கின்றனர்.
இதுதவிர ஒரு சில சமூக அமைப்புகள் சில முக்கிய தினங்களில் ரத்த தானம் செய்கின்றனர். ஆனால் மொத்தத்தில் 70% பங்களிப்பு கல்லூரி மாணவ, மாணவிகளுடையது தான். கோடை விடுமுறை விடப்பட்டால் கல்லூரிகளில் ரத்த தான முகாம்களே நடைபெறாது. எனவே, கல்லூரிகள் திறக்கும் வரை, ரத்த இருப்பு குறைவாகவே இருக்கும்’ என்கின்றனர் மருத்துவர்கள்.
100 யூனிட் மட்டுமே
மருத்துவர் ராஜா கூறும்போது, ‘ஜனவரி முதல் ஏப்ரல் மாத பாதி வரை 1000 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. அதன் பிறகு கோடை விடுமுறை விடப்பட்டது. ஏப்ரல் பாதியிலிருந்து மே இறுதி வரை கடந்த ஒன்றரை மாதத்தில் 100 யூனிட் ரத்தம் மட்டுமே தானமாகக் கிடைத்துள்ளது. கல்லூரிகள் திறந்திருக்கும்போது தேர்வு, விடுமுறைகளைத் தவிர்த்தாலும் சராசரியாக மாதம் 300 யூனிட் ரத்தம் தானமாகக் கிடைக்கும். ஆனால் கோடை காலத்தில் ரத்த தானம் மிகவும் குறைவு. மக்களிடையே ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால், மாணவர்களை மட்டுமே முழுமையாக நம்பியிருக்க வேண்டிய சூழல் உள்ளது’ என்றார்.
நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் வெள்ளை நடராஜ் கூறும்போது, ‘பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ரத்த வங்கி, கல்லூரி மாணவர்களையே மலை போல நம்பியுள்ளது. ஆனால் விடுமுறை காலங்களில் இது சாத்தியமில்லை. பொதுமக்களும் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும். கல்லூரி மாணவர்கள் கிராமப்புறங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாம் தானமாகக் கொடுக்கும் ஒரு யூனிட் ரத்தம் ஒரு உயிரையே காப்பாற்றும் என்பதை உணர வேண்டும்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT