Published : 24 Jun 2015 08:35 PM
Last Updated : 24 Jun 2015 08:35 PM

ரூ.182 கோடியில் புதிய கிடங்குகள், கட்டிடங்கள்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

தமிழகம் முழுவதும் கூட்டுறவு, உணவுத்துறை சார்பில் ரூ.182.38 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கிடங்குகள் மற்றும் கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பொது விநியோகத் திட்டத்துக்கான உணவு தானியங்களை அதிகமாக சேமிக்க புதிய கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன. அதன்படி, தூத்துக்குடியில் ரூ.2.40 கோடி செலவில் 3,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு, திருவள்ளூர், திருநெல்வேலி, ராமநாதபுரம், வேலூர், மதுரை, காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் ரூ.47.97 கோடியில் கட்டப்பட்ட 30 கிடங்குகளை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

இதுதவிர, அறுவடையின்போது விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், உற்பத்திப் பொருட்களை சேமித்து விற்க 29 மாவட்டக் கூட்டுறவு சங்கங்களில் ரூ.113.36 கோடியில் 884 சேமிப்பு கிடங்குகள், நவீனப்படுத்தப்பட்ட 8 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் 36 கிளைகள், 12 நகர கூட்டுறவு வங்கிகள்,10 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், 69 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், காஞ்சிபுரம் செவிலிமேடு, தருமபுரி காரிமங்கலம், ராமநாதபுரம் பரமக்குடி ஆகிய இடங்களில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளின் 3 கிளைகளுக்கு புதிய அலுவலக கட்டிடங்கள் ஆகியவற்றையும் முதல்வர் திறந்துவைத்தார்.

கடலூர், ஈரோடு, நீலகிரி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் மத்திய கூட்டுறவு வங்கிகளின் 7 கிளைகள், தஞ்சை, ஈரோடு, ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்களில் 9 வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் புதிதாக பாதுகாப்பு அறைகள், திருச்சி மாவட்டம் துறையூரில் 60 மெட்ரிக் டன் கணினி எடை மேடை மற்றும் மதுரை, கடலூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் 5 இடங்களில் வேளாண் பொருட்களை பதப்படுத்தி விற்பதற்கான பதனிடும் அலகுகள்.

பாதுகாப்பு பெட்டகங்கள்

நாமக்கல், தேனி, தூத்துக்குடி, திருச்சி, திருவாரூர் மாவட்டங்களில் 29 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் வாடிக்கையாளர்களின் நகைகள், ஆவணங்களை பாதுகாக்க பாதுகாப்பு பெட்டகங்கள், ஆரணி, பெரியகுளம், சக்கம்பட்டி, சங்கனூர், பாப்பநாயக்கன் புதூர் கூட்டுறவு பண்டக சாலைகளுக்கு சில்லறை விற்பனை பிரிவுகள், பொள்ளாச்சி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் சுயசேவை பிரிவு ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன.

கூட்டுறவுத்துறை சார்பில் ஈரோட்டில் கூட்டுறவு இணை மற்றும் துணை பதிவாளருக்கான அலுவலகம், கரூர், வேலூர், திண்டுக்கல்லில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க கிடங்குகள், திண்டுக்கல், வேலூர், கரூர் மாவட்டங்களில் 5 இடங்களில் வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய கட்டிடங்கள் என கூட்டுறவு மற்றும் உணவுத்துறை சார்பில் மொத்தம் ரூ182 கோடியே 38 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கிடங்குகள், புதிய கட்டிடங்கள், வங்கிக் கிளைகளை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x