Published : 26 Jun 2015 08:51 AM
Last Updated : 26 Jun 2015 08:51 AM
கூடங்குளம் முதலாவது அணு உலையில் உற்பத்தி செய்யப்பட்ட 687 கோடி யூனிட் மின்சாரத்தில் 56 சதவீதம் தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்து இந்த அணு உலை சாதனை படைத்திருக்கிறது.
1988-ம் ஆண்டு இந்திய - ரஷ்ய கூட்டுமுயற்சியில் ரூ.13,500 கோடியில் கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம் தொடங்கப்பட்டது.
தலா ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறனுள்ள இரு அணுஉலைகளை அமைக்கும் திட்டப் பணிகள் 2001-ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டு, ரூ.17 ஆயிரம் கோடியில் இரு அணு உலைகளும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அமைக்கப்பட்டன.
2013-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி மின் உற்பத்திக்கான ஆயத்த பணிகள் தொடங்கி, முதலாவது அணுஉலையில் இருந்து 2013-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி மின் உற்பத்தி வெற்றிகரமாக தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 10-ம்தேதி முதல் முதல் அணுஉலையிலிருந்து 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
இதன்மூலம் நாட்டில் அணுமின் நிலையங்களில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவு 5,780 மெகாவாட்டாக உயர்ந்தது. நாட்டிலேயே ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் முதலாவது அணுஉலை என்ற பெருமையும் கிடைத்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி முதல் வணிகரீதியிலான மின் உற்பத்தி இந்த அணுஉலையில் தொடங்கப்பட்டது. அன்று முதல் நேற்று முன்தினம் காலை 7 மணி வரை 687 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்து இந்த அணுஉலை சாதனை படைத்திருக்கிறது. தற்போது வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காகவும் மற்றும் எரிபொருள் நிரப்புவதற்கும் அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த அணுஉலையில் இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டது என்பது குறித்து, `தி இந்து’விடம் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் கூறியதாவது:
மொத்தமாக இதுவரை உற்பத்தி செய்த 687 கோடி யூனிட் மின்சாரத்தில் 56 சதவீதம் தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மின்சாரம் கேரளம், ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய தென்மாநிலங்களுக்கு மத்திய மின்தொகுப்பில் இருந்து விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு வரையில் உற்பத்தி செய்த மின்சாரம் யூனிட்டுக்கு ரூ.1.22 என்ற கட்டணத்தில்தான் வழங்கப்பட்டது. டிசம்பர் 31-ம் தேதிக்குப் பின் வணிகரீதியில் மின்உற்பத்தி தொடங்கப்பட்ட பின்னர் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.3.90 என்ற கட்டணத்தில் வழங்கப்பட்டது. இந்த மின் கட்டணத்துக்கான தொகையை இந்திய அணுசக்தி கழகத்துக்கு அந்தந்த மாநிலங்கள் செலுத்தும்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT