Published : 30 Jun 2015 01:56 PM
Last Updated : 30 Jun 2015 01:56 PM

தேர்தல் ஆணையத்தால் தலைகுனிவு: ஸ்டாலின் கருத்து

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், "ஜனநாயக தேர்தல் நடைமுறைகளை நொறுக்கி தள்ள ஆளும் கட்சிக்கு தாராளமாக அனுமதி கொடுத்த தேர்தல் ஆணையத்தைப் பார்த்து வெட்கித் தலை குனிய வேண்டியிருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட கருத்து:

"ஜனநாயக நெறிமுறைகள் அனைத்தும் தோல்வி அடைந்துவிட்டன என்பதற்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் உதாரணம். எண்ணற்ற தேர்தல் விதிமீறல்கள் நடைபெற்றும் அவற்றை கண்டிக்காமலும் கண்டு கொள்ளாமலும் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்தது.

அதிமுகவினர் பலவந்தமாக பூத்துகளுக்குள் புகுந்து வாக்களித்தார்கள். பண வினியோகம் தாராளமாக நடந்தது. சுயேட்சை வேட்பாளர்கள் தாக்கப்பட்டு அடக்கப்பட்டார்கள். டிராபிக் ராமசாமி மிரட்டப்பட்டு அவர் மீது தாக்குதலே நடத்தப்பட்டது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு புதிய சாலைகள் போடப்பட்டன. தேர்தல் ஆணையமும், காவல் துறையும் கூட்டணி அமைத்து ஆளும் கட்சிக்கு உதவி செய்து அமைதி காத்தன. மொத்தத்தில் இடைத்தேர்தல் ஒரு ஏமாற்று நாடகமாகவே அமைந்து விட்டது.

ஜனநாயக தேர்தல் நடைமுறைகளை நொறுக்கி தள்ள ஆளும் கட்சிக்கு தாராளமாக அனுமதி கொடுத்த தேர்தல் ஆணையத்தைப் பார்த்து வெட்கித் தலை குனிய வேண்டியிருக்கிறது.

இதுதான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற்ற பயங்கரவாதம் என்பதை பார்க்கும்போது வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தல் எப்படி நடக்கும் என்பதை கற்பனை செய்து கொள்ள வேண்டியதுதான்.

மாற்று கருத்து கூறுபவர்களும், ஜனநாயக மாண்புகளும் அதிமுக ஆட்சியில் நசுக்கப்படுவதை அறவே ஏற்றுக் கொள்ள முடியாது.

ஜனநாயகம் உயிர் மூச்சுடன் நிலைத்து இருக்க தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். ஜனநாயகத்தை சீர்குலைக்க நடக்கும் அனைத்து முயற்சிகளையும் முறியடிக்க திமுக போராடும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x