Published : 24 Jun 2015 06:32 PM
Last Updated : 24 Jun 2015 06:32 PM

இந்திய மீனவர்களை சுடக் கூடாது: இலங்கையிடம் மத்திய அரசு வலியுறுத்தல்

இந்திய மீனவர்களை சுடக்கூடாது, தாக்கக்கூடாது என இலங்கையை தொடர்ந்து வற்புறுத்தி வருவதாக உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராமேசுவரம் பாம்பனை சேர்ந்த மீனவர்கள் டேனியல் (25), எஸ்ரோன் (19), வில்சன் (19). 25.8.2014-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இவர்கள் திரும்பி வரவில்லை. இவர்களை மீட்க உத்தரவிடக்கோரி மீனவர் உரிமை கூட்டமைப்பு ஒருங்கிணைப் பாளர் சி.ஜே.ராஜன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், வி.எஸ்.ரவி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார். மத்திய வெளியுறவுத் துறை துணைச் செயலர் பிரபுல்லா சந்திரசர்மா சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மீனவர்கள் 3 பேரும் இலங்கை நெடுந்தீவு பகுதியில் மாயமாகியுள்ளனர். இவர்கள் காணாமல்போனது தொடர்பாக இலங்கை தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீனவர்களை இலங்கை கப்பற் படை தீவிரமாகத் தேடியது. இருப்பினும் இதுவரை அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. மனிதாபிமான அடிப்படையில் மீனவர்களை தேடும் பணி நடை பெற்று வருகிறது.

கடலுக்கு மீன்பிடிக்க வரும் இந்திய மீனவர்களை தாக்கக்கூடாது, சுடக்கூடாது என இலங்கையை மத்திய அரசு தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. இலங்கையால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள், தூதரக உதவிகள், உணவு, மருந்து வசதிகளை செய்து வருகிறோம். மீனவர்கள் பிரச்சினை சிக்கலானது. மீனவர் களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடையது. மனிதாபி மானத்துடன் இப்பிரச்சினையை அணுகி வருகிறோம். மீனவர் பிரச்சி னையை தீர்ப்பது தொடர்பாக இலங்கை அரசுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்.

மத்திய அரசின் தீவிர முயற்சியால் 2012-ல் 197, 2013-ல் 676, 2014-ல் 787 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2015 ஜூன் 1-ம் தேதி வரை 191 மீனவர்களை இலங்கை பிடித்துச் சென்றது. இவர்களில் 177 பேர் விடுதலை செய்யப்பட்டனர். எஞ்சிய 14 பேரை விடுதலை செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிப்பதால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதாக இலங்கை கப்பற்படை தெரிவிக்கிறது.

இந்திய மீனவர்களைப் பாதுகாக்க மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது எனக் கூறப்பட்டிருந்தது.

தமிழக மீன்வளத் துறை உதவி இயக்குநர் கே.டி.கோபிநாதன் தாக்கல் செய்த பதில் மனுவில், மாயமான மீனவர்களை மீட்க கடலோர காவல்படை, கப்பல் படையுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மாயமான மீனவர்கள் 3 பேரின் குடும்பத்துக்கு இதுவரை தினமும் ரூ.250 வீதம் ரூ.1.33 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அடுத்த விசாரணையை ஆகஸ்டுக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x