Published : 16 Jun 2015 09:56 AM
Last Updated : 16 Jun 2015 09:56 AM

பெரம்பலூர் அருகே தனியார் பள்ளியில் கான்கிரீட் தளம் சரிந்து 3 பேர் மரணம்

பெரம்பலூர் அருகே வெங்கலம் தனியார் பள்ளியில் கட்டுமானப் பணியின்போது, கான்கிரீட் தளம் சரிந்ததில் 3 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் அரும் பாவூர் அருகே வெங்கலம் என்ற ஊரில் தொண்டமாந்துறை பிரிவு சாலையில் அன்னை மெட்ரிக். பள்ளி என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியின் கட்டிட விரிவாக்கப் பணிகளில் ஒன்றாக நேற்று முன்தினம் முதல் தளத்துக்கு கான்கிரீட் போடும் பணி நடைபெற்றது.

இப்பணியில் ஈடுபட்ட கட்டு மான தொழிலாளர்களில் பெரும் பாலானோர் சேலம் மாவட்டம் லத்துவாடி கிராமத்தைச் சேர்ந்த வர்கள். அவ்வப்போது மழையால் பணி தடைபட்டதால், இரவிலும் தொடர்ந்து நடைபெற்றது. இரவு 8 மணிக்குப் பிறகு மழை விடாது பெய்ததால், பணியில் ஈடுபட்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்களில் 40-க்கும் மேற்பட்டோர் புதிதாக தளமிடப் பட்ட கட்டிடத்தின் முன் கூரையின் கீழே கூடிநின்றனர்.

இரவு 9 மணியளவில் எதிர் பாராவிதமாக கான்கிரீட் கூரையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. பெரும்பாலானவர்கள் தப்பி வெளியேறிவிட இடிபாடுகளில் சிக்கி லத்துவாடியைச் சேர்ந்த தொழிலாளர்கள் பெரியசாமி மகள் பிரியா(19), நல்லுசாமி மனைவி காந்தி(40) மற்றும் தேனி மாவட்டம் அல்லி நகரத்தைச் சேர்ந்த எலெக்ட்ரீஷியன் கணேசன்(45) ஆகியோர் அதே இடத்திலேயே இறந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் பொதுமக்களின் உதவியுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். லத்துவாடியைச் சேர்ந்த சந்திரா(40), சித்ரா(27) மற்றும் மணிகண்டன்(21) ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டு பெரம் பலூர் அரசு தலைமை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்தை ஆட்சியர் (பொ) ப.மதுசூதன்ரெட்டி, காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்திரா உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

உரிய தாங்கு தூண்கள் இன்றி கான்கிரீட் கூரை வேயப்பட்டிருந்ததும், தளத்துக்கு அடியில் பொருத்தப்பட்டிருந்த மரக்கட்டைகள் சரியாக அமைக்கப்படாததுமே, கான்கிரீட் தளம் சரிந்து 3 பேர் பலியாகக் காரணம் என தெரியவருகிறது.

இதுகுறித்து அரும்பாவூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான பள்ளியின் தாளாளர் தங்கவேல், பொறியாளர் தினகரன், கான்கிரீட் பணி மேஸ்திரி ஆகியோரை தேடிவருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x