Published : 04 Jun 2015 12:28 PM
Last Updated : 04 Jun 2015 12:28 PM

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரலையாக ஒளிபரப்புக: ராமதாஸ்

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரலையாக ஒளிபரப்பினால், உறுப்பினர்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள் என்பதால் அரசு இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரலையாக ஒளிபரப்பு செய்யும்படி சட்டப்பேரவைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது? என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு வினா எழுப்பியிருக்கிறது. ஆனாலும், இவ்விஷயத்தில் அரசுத் தரப்பில் மழுப்பலாகவே பதில் தரப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்த தமிழகத்தின் நலன் சார்ந்த விவாதங்களும், மக்கள் பிரச்சினை குறித்த விவாதங்களும் நடைபெற வேண்டிய களம் தமிழக சட்டப்பேரவை தான்.

ஒரு காலத்தில் அறிவார்ந்த விவாதங்களை நடத்திய அம்மன்றம் இப்போது எவ்வாறு செயல்படுகிறது? என்பது பலரும் அறிந்த விஷயம் தான்.

ஆனாலும், தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தங்களின் பிரதிநிதியாக அனுப்பி வைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு மக்கள் பணியாற்றுகிறார்கள்? என்பதை அறிந்து கொள்ளும் உரிமை தமிழக மக்களுக்கு உண்டு.

இதற்கு ஒரே வழி தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரலையாக ஒளிபரப்பு செய்வது தான். அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கப்பட்ட போது, அதன்வழியாக தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் 4 ஆண்டுகள் ஆன பிறகும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

பத்தாண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை தனியார் தொலைக்காட்சிகள் முழுமையாக பதிவு செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டது. ஆனால், ஒருசில நாட்களிலேயே இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் பேரவை நிகழ்ச்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் மட்டும் தனியார் தொலைக்காட்சிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

தொலைக்காட்சிக்கு வழங்கப்படும் தொகுப்பில் அரசு ஆதரவு பேச்சுக்கள் மட்டுமே இடம் பெறும்; அரசுக்கு எதிரான விமர்சனங்கள் இடம் பெறாது.

இது சட்டப்பேரவை நடவடிக்கைகளின் உண்மை நிலையை பிரதிபலிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப சட்டப்பேரவைச் செயலகம் தயங்குவது ஏன்? என்பது பலரும் அறிந்த ஒன்று தான்.

சட்டப்பேரவை என்பது விவாதக்களமாக திகழ்ந்த நிலை மாறி சில நேரங்களில் கவியரங்கமாகவும், பல நேரங்களில் எதிரிகளை வசைபாடும் களமாகவும் தான் செயல்படுகிறது. கேள்வி நேரத்தின் போது ஆம் / இல்லை என்று ஒற்றை வார்த்தையில் பதிலளிப்பதற்கு முன்பாக ஒன்றரை பக்கத்திற்கு முதலமைச்சரை புகழ்ந்து கவிதை பாடி விட்டு, அதன்பிறகு தான் கேள்விக்கு பதிலளிப்பதை அமைச்சர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

மானியக் கோரிக்கை மீதான பதிலுரையின் போது அமைச்சர்கள் அளிக்கும் பதிலில் துறை சார்ந்த விஷயங்களை விட, முதலமைச்சரின் புகழ் பாடும் பகுதி தான் அதிகமாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகிவிட்டது.

அதேநேரத்தில் அரசின் குறைகளை எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர்கள் சுட்டிக் காட்டினால், அவர்களுக்கு எதிராக ஆளுங்கட்சி வரிசையிலிருந்து எழும் வசவுகளை காதில் கேட்க முடியாது. துதிபாடல் மற்றும் வசவுகளின் அளவு வேண்டுமானால் ஆட்சிக்கு ஏற்றவாறு மாறுமே தவிர, இது தான் பேரவை நிகழ்வுகளின் இலக்கணம் என்ற நிலை உருவாகி 50 ஆண்டுகளாகிவிட்டது.

அதுமட்டுமின்றி, சட்டப்பேரவையில் முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேச எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதும், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.

பேரவைத் தலைவர்களாக இருப்பவர்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் தலைவர்; பொதுவானவர் என்ற நிலையிலிருந்து இறங்கி, தங்கள் தலைமையின் கண்ணசைவுக்கு ஏற்ப செயல்படுபவர்களாகிவிட்டனர்.

பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பு செய்தால் இந்த உண்மைகள் அனைத்தும் வெளிவந்து விடும் என்பதே ஆட்சியாளர்களின் தயக்கத்துக்குக் காரணம்.

மக்களவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. ஆந்திரா, கேரளா ஆகிய சட்டப்பேரவை நிகழ்ச்சிகளும் நேரலையில் ஒளிபரப்படுகின்றன.

கர்நாடக சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் எந்தவித வெட்டும் செய்யப்படாமல் அப்படியே தொலைக்காட்சிகளுக்கு வழங்கப்படுகின்றன.

ஆனால், தமிழகம் மட்டும் பேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பத் தயங்குவது சரியல்ல. பேரவை நிகழ்வுகளை படம் பிடிப்பதற்கான கட்டமைப்புகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அதை நேரலையில் ஒளிபரப்ப கூடுதலாக ஏற்படும் செலவு பெரிய அளவில் இருக்காது.

அதேநேரத்தில் பேரவை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பபட்டால் அவையில் நடப்பதை மக்களால் தெரிந்து கொள்ள முடியும்; உறுப்பினர்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள் என்பன உள்ளிட்ட பல நன்மைகள் ஏற்படும்.

எனவே, சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்ப அரசும், பேரவைச் செயலகமும் முன்வர வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x