Published : 28 Jun 2015 11:52 AM
Last Updated : 28 Jun 2015 11:52 AM

திருச்சி ஆவின் நிர்வாகத்தால் உற்பத்தியாளர்கள் அதிருப்தி: வாய்க்காலில் பால் ஊற்றுவதை கண்டித்து போராட்டம் - 50,000 லிட்டர் ஆறாக ஓடிய அவலம்

திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய (ஆவின்) அலுவலகத்துக்கு உற்பத்தியாளர்கள் கொண்டுவரப்படும் பாலை தாமதமாக கொள்முதல் செய்வதோடு அவை கெட்டுப்போனதாகக் கூறி கீழே ஊற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த உற்பத்தியாளர்கள் நேற்று தாங்களே பாலை கீழே ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி கொட்டப்பட்டு அருகே இயங்கி வரும் திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்துக்கு திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 4 மாவட்டங்களிலிருந்து தினமும் 3,14,019 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் திருச்சி மாவட்டத்திலிருந்து மட்டும் 1,17,455 லிட்டர் கொள்முதல் ஆகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலை ஆவின் நிர்வாகம் கீழே ஊற்றி வாய்க்காலில் கலந்துவிடுவதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து அறிய திருச்சி ஆவின் நிறுவனத்துக்கு நேற்று சென்ற போது, “கொண்டு வரப்படும் பாலை தாமதமாக கொள்முதல் செய்கின்றனர். மேலும், பால் கெட்டுப்போனதாகக் கூறி வாய்க் காலில் ஊற்றுவதைப் பார்க்க மனம் சகிக்கமுடியவில்லை” என்று வேதனையுடன் கூறிய உற்பத்தி யாளர்கள், இந்த செயலைக் கண்டித்து நேற்று தாங்கள் கொண்டு வந்த சுமார் 50 ஆயிரம் லிட்டர் பாலை கீழே ஊற்றினர்.

வாய்க்காலில் பால் ஊற்றப் படுவது குறித்து அங்கிருந்த ஊழியர்களிடம் கேட்டபோது, “கடந்த ஒரு மாதமாகவே உற்பத்தியாளர்கள் கொண்டுவரும் பாலை தாமதப்படுத்தியே வாங்கு கின்றனர். கொள்முதல் செய்வதை தாமதப்படுத்துவதால், பால் கெட்டுப்போகிறது. உடனே அந்த பாலை கீழே ஊற்றிவிடுகின்றனர். தினமும் கொள்முதல் செய்யப்படும் சுமார் 3.5 லட்சம் லிட்டர் பாலில் 1.17 லட்சம் லிட்டர் மட்டுமே விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. எஞ்சிய பால் வாய்க்காலில் ஊற்றப்படுகிறது” என்றனர்.

அங்குள்ள அதிகாரிகளிடம் விசாரித்தபோது, “இங்கு பால் கொள்முதல் திறனுக்கேற்ற வகை யில் பதப்படுத்தும், குளிரூட்டும், பாக்கெட் செய்யும் வசதிகள் குறைவு. பால் கொள்முதல் செய்யும் வாகனத்துக்கு குறைவான வாடகை நிர்ணயிக்கப்படுகிறது. அதனால் பால் தாமதமாக ஒன்றி யத்துக்கு வந்து சேருவதால் கெட்டுவிடுகிறது. மேலும் பால் பவுடர் தயாரிப்புக்கு பால் அனுப்பப்படுவதும் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனாலேயே பாலை கீழே ஊற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது” என்றனர்.

இதுதொடர்பாக ஆவின் நிறுவன தொழிற்சங்கப் பிரமுகர் ஒருவரிடம் விசாரித்தபோது, “தமிழகத்தில் ஆவின் பாலுக்கு நிறைய கிராக்கி உள்ள போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் ஆவின் நிர்வாக உயரதிகாரிகள் சிலர் தனியார் பால் நிறுவனங் களுக்கு ஆதரவாக செயல்படுவதே இதற்கு முதல் காரணம்.

மேலும் திருச்சி ஆவினில், பதப்படுத்தும் திறனை அதிகரிக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மேலும் பாலின் வரத்து கூடுதலாக இருக்கும் பட்சத்தில் உற்பத்தியாளர்களின் நிலையைக் கருத்தில்கொண்டு, பாலை மதிப்புக் கூட்டி நெய், பால்கோவா, வெண்ணெய், பாலாடைக்கட்டி போன்றவற்றின் உற்பத்திகளை அதிகரித்தோ அல்லது உற்பத்தி செய்யப்பட்டதை விலை குறைத்தோ விற்பனை செய்யும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை” என்றார்.

ஆவின் நிறுவன உயரதிகாரி ஒருவரின் வாய்மொழி உத்தரவின் பேரில்தான், பால் தாமதமாக கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆந்திராவிலிருந்து வரும் பால் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படும்படி உத்தர விடப்பட்டுள்ளது என ஆவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பால் உற்பத்திக்குப் பின்னால் இருக்கும் உழைப்பு, பாலின் அருமையை அறியாமல் வாய்க் காலில் ஊற்றி வீணடிக்கப்படுவது மன்னிக்க முடியாத குற்றம் என பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x