Published : 01 Jun 2015 08:04 PM
Last Updated : 01 Jun 2015 08:04 PM

தமிழக சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியிலேயே தேர்தல் வரக்கூடும்: தொண்டர்களுக்கு கருணாநிதி அழைப்பு

தமிழக சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியிலேயே தேர்தல் வரக்கூடும் என செய்திகள் வருவதால் திமுக தொண்டர்கள் அதற்கு தயாராக வேண்டும் என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது 92-வது பிறந்த நாளையொட்டி, அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ''ஜூன் 3-ம் தேதியுடன் எனக்கு 91 வயது முடிந்து 92-வது வயது பிறக்கிறது. கடந்த மே 18-ம் தேதி முத்தமிழ் பேரவை ஆண்டு விழாவில் பேசும்போது, ‘‘நூறாவது பிறந்தநாளை உங்களோடு கொண்டாடுவேன். உடல் தளர்ச்சியைப் போக்கி உணர்ச்சியையும், உத்வேகத்தையும் வழங்க உங்களைத்தான் நம்பியிருக்கிறேன்’’ என குறிப்பிட்டேன். தொண்டர்களாகிய நீங்கள் எந்த அளவுக்கு எழுச்சியோடு இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு நானும் தளர்ச்சி நீங்கி தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பாடுபடுவேன்.

‘இன்னும் 50 ஆண்டுகளுக்கு இந்த இயக்கத்தின் பணி தேவை’ என அண்ணா ஒருமுறை குறிப்பிட்டார். அண்ணா மறைந்து 46 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், நமது இயக்கத்துக்கான தேவை இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

எனக்கும், பொதுச்செயலாளர் அன்பழகனுக்கும் உடல் தளர்ந்து விட்டாலும் தமிழ் இனத்தை எப்படி முன்னேற்றலாம் என்ற வேட்கைதான் பெரிதும் வாட்டி வதைக்கிறது. முன்புபோல எங்களால் சுற்றுப்பயணம் செய்ய முடியாவிட்டாலும் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இளைஞர்கள் ஓயாது நம்பிக்கையுடன் பணியாற்றி வருவதை அறிவேன்.

1969-ல் திமுகவை என்னிடம் ஒப்படைத்துவிட்டு அண்ணா மறைந்தார். இந்த 46 ஆண்டுகளில் எத்தனையோ பிரச்சினைகள், துரோகங்கள், தூற்றல்கள், எள்ளல்கள், சச்சரவுகள் ஆர்ப்பரித்து வந்தபோதிலும் அனைத்தையும் சமாளித்து வெற்றிநடை போட்டு வருகிறோம்.

இந்த ஆண்டு இறுதியிலேயே தேர்தல் வரக்கூடும்

தமிழக சட்டப்பேரவைக்கு 2016-ல் தேர்தல் வரவேண்டும். ஆனால், இந்த ஆண்டு இறுதியிலேயே தேர்தல் வரக்கூடும் என்ற செய்தி உலா வருகிறது. எப்போது தேர்தல் வந்தாலும் இப்போதுள்ள ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக இருக்கிறார்கள். திமுக ஆட்சியின் சாதனைகளையும், அதிமுக அரசின் 4 ஆண்டு கால துன்பங்களையும் மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

திமுகதான் வேட்பாளர்

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் யார் என்பதையும் தேர்வு செய்ய வேண்டும். நாம் எதிர்க்க வேண்டியவர்கள் பண பலத்தால் எதையும் சாதிக்க நினைப்பவர்கள். எனவே, மன வலிமையும், துணை வலிமையும் பெற்றவராக நமது வேட்பாளர் இருக்க வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் யார் வேட்பாளர் என்பதைவிட திமுகதான் வேட்பாளர் என்ற திட எண்ணம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.

தேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொண்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்து, பின்னடைவு பாதையில் சென்று கொண்டிருக்கும் தமிழகத்தை மீட்டு முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு பணியாற்ற தொண்டர்கள் முன்வர வேண்டும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.











FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x