Published : 24 Jun 2015 07:43 AM
Last Updated : 24 Jun 2015 07:43 AM

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியை கைது செய்ய வேண்டும்: பண மோசடி வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை தலைமை செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.3 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் அவரது மகனை கைது செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ் பிறப்பித்த உத்தரவு:

சென்னை தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அண்மையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.விவேகானந்தன் மற்றும் அவரது மகன் கவின் விவேக் ஆகியோர் 13 பேரிடம் ரூ.1.3 கோடி பணம் வாங்கி மோசடி செய்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை திருமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்தனர். இவ்வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு, எழும்பூர் 20-வது பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவர்களுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்படி, அவர்களைப் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. இந்த வழக்கை கைவிடும்படி சில அதிகாரிகள் அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட இவர்களால் பாதிக்கப்பட்ட ஒருவர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் அவரது மகன் மீதான ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டை செயல்படுத்த உத்தரவிட்டு, நீதியை நிலைநாட்டக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில், திருமங்கலம் காவல்நிலைய ஆய்வாளர் தாக்கல் செய்த அறிக்கையில், குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வழக் கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வர்களை கைது செய்யும் நடவடிக் கைகளை அண்ணாநகர் காவல் துணை ஆணையர் கண்காணிக்க வேண்டும். இவ்வழக்கை நீதிமன்றம் கண்காணிக்கும். காவல்துறை அறிக்கை தாக்கல் செய்வதற்காக வழக்கு 3 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று நீதிபதி பி.என்.பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x