Published : 05 Jun 2015 10:14 PM
Last Updated : 05 Jun 2015 10:14 PM

மதுக்கடைகளை மூடினால் இலவசங்கள் வாங்கும் நிலை மக்களுக்கு வராது: ஜி.கே.வாசன் கருத்து

தமிழகத்தில் மதுக்கடைகளை மூடினால் மிக்சி, கிரைண்டர் போன்ற இலவசப் பொருட்களை வாங்கும் நிலை மக்களுக்கு ஏற்படாது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தமாகா சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மூத்த துணைத் தலைவர்கள் பி.எஸ்.ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது வாசன் பேசியதாவது: ''விடுதலைக்குப் பிறகு ராமசாமி ரெட்டியார், ராஜாஜி, காமராஜர் ஆட்சியில் மது இல்லாத தமிழகத்தை உருவாக்கினார்கள். மதுவினால் கிடைக்கும் வருமானம் இல்லாமலேயே காமராஜர் பல புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்தினார்.

ஆனால், திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயிப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த ஆண்டு மது விற்பனை மூலம் தமிழக அரசுக்கு ரூ. 25,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

மது விற்பனை வருவாய் இல்லாவிட்டால் அரசை நடத்த முடியாது என்பதை ஏற்க முடியாது. மதுக்கடைகளை மூடினால் பெரும்பாலான ஏழை, நடுத்தர மக்கள் குடிப்பதை நிறுத்தி விடுவார்கள். இதன் மூலம் அவர்களின் குடும்ப வருவாய் அதிகரிக்கும்.

அரசு வழங்கும் மிக்சி, கிரைண்டர், மின் விசிறி போன்ற இலவசப் பொருள்களை வாங்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படாது. தங்களுக்கு வேண்டியதை வாங்கும் அளவுக்கு மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். எனவே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அதுவரை தமாகா தொடர்ந்து போராட்டங்களை நடத்தும்.

தமாகா நிர்வாகிகள் தங்கள் சுற்றுப் பயணங்களின்போது கட்சிப் பணியோடு மதுவினால் ஏற்படும் தீமைகளை விளக்கும் விழிப்புணர்வு பிரச்சாரத்திலும் ஈடுபடுவார்கள் என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாசன், ‘‘போதிய தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்திருப்பது வேதனை அளிக்கிறது. குறுவை சாகுபடிக்காக மே, ஜூன் மாதங்களில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 25 டி.எம்.சி. தண்ணீரைப் பெற்றுதர மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு மவுனம் சாதிப்பது கண்டிக்கத்தக்கது’’ என்றார்.

ஆர்ப்பாட்ட மேடையில் தமாகா மாணவரணி சார்பில் மதுவினால் ஏற்படும் தீமைகளை விளக்கும் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x