Last Updated : 21 Jun, 2015 09:21 AM

 

Published : 21 Jun 2015 09:21 AM
Last Updated : 21 Jun 2015 09:21 AM

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு திமுகவும் அதிமுகவும் இணங்காது: தமாகா மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கருத்து

தமிழகத்தில் 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் கூட்டணி ஆட்சிக்கு திமுகவும் அதிமுகவும் இணங்காது என்று தமாகா மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

‘தி இந்து’-வுக்கு கோவையில் அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் ஜெ. போட்டியின்றி தேர்ந்தெடுக்க பகிரங்க அறிக்கை விட்டீர்களே? 2016 தேர்தலில் அதிமுக - தமாகா கூட்டணி அமைப்பதற்கான ஏற்பாடா?

தவறு என் மீது இல்லை. அந்த அறிக்கையை வைத்து இப்படி யொரு உள்நோக்கம் கற்பிப்பது ஆரோக்கியமான அரசியல் அல்ல. ஜெயலலிதாவை எதிர்த்து பெரிய கட்சிகள் போட்டியிடத் தயங்குகின்றன. முதல்வராக இருக்கும் ஜெயலலிதா 6 மாதத்தில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. தார் மிக அடிப்படையில் அவர் போட்டி யின்றி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே முறை.

இந்த அறிக்கைக்கு பின்புதான் உங்களுக்கும் வாசனுக்கும் ஊடல், நீங்கள் அதிமுகவுக்கு போகப் போகிறீர்கள் என செய்திகள் வருகின்றனவே?

செய்திகள் பரப்பப்படுவது போல் வாசனும் நானும் பேசாமல் இருக்கிறோம் என்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. 50 ஆண்டு காலத்துக்கு மேலாக தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்ட வன் நான். அதிமுகவுக்கு போகப் போகிறேன் என்று யார் கணக்குப் போட்டாலும் அது ரொம்ப தவறு.

தேசிய, மாநில அரசியலில் கரை கண்ட உங்களுக்கு இந்த மாதிரி செய்திகள் மனவருத்தத்தை ஏற்படுத்தவில்லையா? அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா?

வேண்டுமென்றே அப்படிப்பட்ட புரளியை சிலர் கிளப்புகின்றனர். அதற்கு கட்சிக்குள் பேசித்தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தமாகா ஆரம்பித்த நிலையில் மூப்பனார் இருந்த அணுகுமுறைக்கும், வாசனின் அணுகுமுறைக்கும் வித்தியாசம் ஏதும் தெரிகிறதா?

மூப்பனாரின் அனுபவம் அதிகம். வாசன் அனுபவம் பெற்றுக் கொண்டிருக்கிறார்.

நிர்ப்பந்தத்தால் திடீரென்று நீங்கள் வாசன் ஆரம்பித்த தமாகாவுக்கு சென்றீர்கள். காங்கிரஸிலேயே இருந்திருந்தால் உங்களுக்கு உயர்ந்த பதவிகள் காத்திருந்துள்ளன என்றெல்லாம் உங்கள் அனுதாபிகளி டம் பேச்சு உள்ளதே?

மாநில நிலைமைகளை புரிந்துகொண்டு நீண்ட காலம் யோசித்து பேசி எடுக்கப்பட்ட முடிவுதான். அதற்கான நியாயமான காரணங்கள் நிறைய சொல்லலாம். இருந்தாலும் அது இப்போது வேண்டாம்.

2016-ல் ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு; அந்த கட்சியுடன் தான் கூட்டணி என்ற குரல் தமிழகத்தில் காங்கிரஸ் உட்பட திமுக அல்லாத முக்கிய கட்சிகளிடம் ஒலித்து வருகிறதே? தமாகாவின் நிலை என்னவாக இருக்கும்?

கூட்டணி ஆட்சிக்கு திமுகவும் அதிமுகவும் இணங்காது இப்போதைக்கு எந்த நிபந்தனையையும் விதிக்கும் சூழலில் நாங்கள் இல்லை. தேர்தல் காலத்தில் உகந்த முடிவை எடுப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x