Published : 08 Jun 2015 07:57 PM
Last Updated : 08 Jun 2015 07:57 PM
தேர்தல் நேரத்தில் பாஜக கொடுத்த வாக்குறுதியின்படி, மீனவர்களுக்கென்று மத்திய அரசில் தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டுமென மீனவர் அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. தனி அமைச்சகம் அமையும் போது தான் மீனவர் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகள் கிடைக்கும் என்று, மீனவ அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
எதுவும் நடக்கவில்லை
தமிழ்நாடு மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவன தலைவர் ஜஸ்டின் ஆன்றணி கூறும்போது, ‘மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்தொழில் செய்து நம் தேசத்துக்கு பல கோடி மதிப்பிலான அந்நிய செலாவணியை ஈட்டித் தருகின்றனர். ஆனால், இவர்கள் கடலிலும், கரையிலும் படும் கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
மீனவர்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மீனவர்களுக்கென்று மத்திய அரசில் தனி அமைச்ச கம் அமைப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்குமென்று கடந்த ஆட்சியின்போதே வலியுறுத்தினோம். நாகர்கோவில் வந்த ராகுல்காந்தியிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தினேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை.
அதிர்ச்சியை கொடுத்துள்ளது
இதற்கிடையில் 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்துக்கு பிரச்சாரத்துக்கு வந்த பாஜக தலைவர்கள், மீனவர்களுக்கென்று தனி அமைச்சகம் உருவாக்கப்படுமென உறுதி கூறினர். மீனவர்களும் இதை நம்பினர். ஆனால், அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.
ஆனால் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற பாரம்பரிய மருத்துவத்திற்கென தனியாக அமைச்சரவையை உருவாக்கியுள்ளது மத்திய அரசு. இதற்கு பொறுப்பாக பிரதமர், துணை அமைச்சராக ஸ்ரீபத் யசோதா நாயக் இருப்பர் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், மீனவர்களுக்கென்று மத்திய அரசில் தனி அமைச்சகம் உருவாவதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடப் படவில்லை. இது மீனவ மக்களுக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் கொடுத்துள்ளது.
எனவே, மத்திய அரசு உடனடியாக தேர்தலில் வாக்குறுதி கொடுத்தபடி மீனவர் களுக்கென்று தனி அமைச்சகம் ஏற்படுத்தவேண்டும். இதற்காக தமிழக முதல்வர் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்’ என்றார் அவர்.
தனி அமைச்சகம் அமைந்தால் தான் மீனவர்கள் கடலுக்குள் மாயமானால் விரைவாக தேடுவது, இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டால் மீட்பு பணிகளை மேற்கொள்வது போன்ற மீனவர் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்கின்றனர், மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள்.
நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக தலைவர்கள், மீனவர்களுக்கென்று தனி அமைச்சகம் உருவாக்கப்படுமென உறுதி கூறினர். மீனவர்களும் இதை நம்பினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT