Published : 26 Mar 2014 12:00 AM
Last Updated : 26 Mar 2014 12:00 AM

ஸ்டாலினை வீழ்த்த ஜெயலலிதாவையும் சந்திப்பார் அழகிரி: இன்னமும் ஆர்ப்பரிக்கும் அழகிரி ஆதரவாளர்கள்

திமுக-விலிருந்து மு.க.அழகிரியை நிரந்தரமாகவே நீக்கியுள்ள இந்தச் சூழலில் அவரது அடுத்தகட்ட நகர்வை தமிழக அரசியல் களம் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளது.

மன்மோகன்சிங், ராஜ்நாத் சிங், ரஜினிகாந்த் ஆகியோரை சந்தித்து பரபரப்பு செய்தியாகிப் போனார் அழகிரி. தன்னிடம் ஆதரவு கேட்டு வந்த வைகோவிடம் விருது நகர், தேனி திமுக வேட்பாளர் களை தோற்கடிக்க, தான் என்ன வெல்லாம் செய்துகொண்டிருக் கிறேன் என்று பட்டியல் போட்டா ராம் அழகிரி. மதிமுக-வினரிடம் பேசிய அழகிரி, ‘‘உங்களுக்கு துரோகம் செய்த பொன்.முத்துவையும் எனக்கு துரோகம் செய்த ரத்தினவேலையும் தோற்கடிப்பதே எனது முதல் வேலை’’என்றாராம் அழகிரி.

அழகிரி - வைகோ சந்திப்பு குறித்து ’தி இந்து-விடம் பேசிய அழகிரி விசுவாசிகள், "தன்னைக் கொல்லச் விடுதலைப்புலிகளோடு சேர்ந்து சதி செய்வதாகச் சொல்லி வைகோ-வை கட்சியிலிருந்து துரத்திய கலைஞர், இன்று, ‘ஸ்டாலினை கொலை செய்வேன்’ என்று சொன்னதாகக் குறிப்பிட்டு அழகிரியை வெளியேற்றியுள்ளார். ஆக, ஸ்டாலினுக்காகவே வைகோ மீதும் அழகிரி மீதும் கொலைப் பழி சுமத்தப்பட்டது. இதுபோலவே பரிதி இளம்வழுதி, டி.ராஜேந்தர், வீரபாண்டியார், கோ.சி.மணி உள்ளிட்டோரும் ஸ்டாலினுக்காகவே ஓரம் கட்டப்பட்டார்கள். கடைசியாக துரைமுருகனை கட்டம் கட்ட அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.

அழகிரியை பொறுத்தவரை இப்போது அவர் எந்தக் கட்சியை யும் சாராதவர். அதனால், அனைத்துக் கட்சித் தலைவர்களும் அவரிடம் ஆதரவு கேட்டு வருகிறார்கள்.

தனது விவகாரத்தில் தலைமை இறுதியான ஒரு முடிவுக்கு வரட்டும் என்பதற்காக காத்திருந்தார் அழகிரி. அந்த முடிவு வந்துவிட்டது. இனிமேல் அவருடைய நடவடிக்கை அதிரடியாகத்தான் இருக்கும். தமிழகம் முழுக்க திமுக-வில் ஓரங்கட்டப்பட்ட திமுக-வின் உண்மை விசுவாசிகள் இப்போது அழகிரி அண்ணனோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அழகிரியைப் பொறுத்தவரை இந்த முறை திமுக வேட்பாளர்களைத் தோற்கடித்து ஸ்டாலினுக்கு, தான் யார் என்பதை நிரூபிக்க நினைக்கிறார். அதற்காக ஜெயலலிதாவை சந்திக்கவும் தயங்கமாட்டார்’’ என்கிறார்கள்.

அழகிரிக்கு நெருக்கமான இன்னொரு தரப்பினரோ, "இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணியை ஆதரிக்கும் முடிவில்தான் அண்ணன் இருக்கிறார். தேர்தல் நெருங்கும்போது இதை வெளிப்படையாக அறிவிப் பார். விஜயகாந்துக்கும் அண்ண னுக்கும் இடையில் இருந்த மனக்கசப்பும் சரிசெய்யப்பட்டு விட்டதால் கூடிய விரைவில் அழகிரி - விஜயகாந்த் சந்திப்பு நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்கிறார்கள்.

சந்தேகமே!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் மதுரை பிரச்சாரத்தின் மையக் கருவே மு.க.அழகிரிதான். "மு.க.அழகிரி மதுரையில் ரவுடிகளை வைத்துக்கொண்டு அராஜகம் செய்துகொண்டிருக்கிறார். அங்கே ஒரு துணை முதல்வர் இருக்கிறார். மதுரைக்கென்றே ஒரு துணை முதல்வர் இருக்கிறார்; அவர்தான் பொட்டு சுரேஷ். அதிமுக ஆட்சி அமைந்ததும் அழகிரியிடமிருந்து மதுரையை மீட்பேன். அழகிரி உள்ளிட்டவர்கள் நிரபராதி என விடுதலை செய்யப்பட்ட தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அப்பீல் செய்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்" என்று முழங்கினார். ’’இப்படியெல்லாம் அழகிரியை வசைபாடி இருக்கும் ஜெயலலிதா அழகிரியை ஒருபோதும் சந்திக்க மாட்டார்’’ என்கிறது மதுரை ஸ்டாலின் திமுக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x