Published : 12 Jun 2015 08:18 PM
Last Updated : 12 Jun 2015 08:18 PM

தாய்மொழிக் கல்வியை கட்டாயமாக்க வலியுறுத்தல்

தாய்மொழிக்கல்வியை கட்டாயமாக அமல்படுத்த வேண்டுமென, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க நீலகிரி மாவட்ட மையத்தின் 4-வது மாவட்ட மாநாடு, உதகையில் உள்ள வருவாய்த் துறை அலுவலர் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் லிங்கராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில், மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட துணைத் தலைவர் காந்தராஜன் வரவேற்றார். கோவை மாவட்ட துணைத் தலைவர் கணேசன் தொடங்கி வைத்தார். கோரிக்கைகள் குறித்து பேசிய மாநில துணைத் தலைவர் கிருஷ்ணன், சென்னையில் ஜூலை 22-ம் தேதி நடைபெறும் மாநில மாநாட்டில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார். புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அனைத்து சிகிச்சைகளுக்கும் மருத்துவ நிதி வழங்க வேண்டும்; நீலகிரி மாவட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெறும் அனைவருக்கும் மலைப்படி மற்றும் குளிர்காலப்படி வழங்க வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும்; மத்திய அரசு வழங்குவதுபோல், ஓய்வூதிய தாரர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.3500 ஓய்வூதியமாக வழங்க வேண்டும்.

கிராம உதவியாளர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.3050 வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கல்வி கட்டண உயர்வை தடுக்க வேண்டும்; தாய்மொழிக் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட இணைச் செயலாளார் அந்தோணிசாமி, மாவட்டச் செயலாளர் திவாகரன், பொருளாளர் நாராயணன், கூடலூர் வட்டக் கிளைத் துணைத் தலைவர் அரசன், கோவை மாவட்ட இணைச் செயலாளர் சிங்காரவேலன் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மாநில செயற்குழு உறுப்பினர் பிலிப் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x