Published : 13 Jun 2015 10:46 AM
Last Updated : 13 Jun 2015 10:46 AM
‘செங்கல்சூளையில் தவித்த நாங்கள் இன்று கல்லூரியில் படித்து வருகிறோம்’ என்று, முன்னாள் குழந்தை தொழிலாளர்கள் உருக்கமாக தெரிவித்தனர்.
உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு பள்ளி, கல்லூரிகளில் படித்து வரும் மாணவ, மாணவியருடன் மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் 28 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
குடும்ப சூழ்நிலை, எதிர்கால திட்டம், அரசிடம் எதிர்பார்க்கும் உதவி போன்ற விபரங்களை ஆட்சியர் கேட்டறிந்தார்.
திசை மாறிய வாழ்க்கை
மாணவி மேனகா கூறும்போது, ‘நான் செங்கல்சூளையில் வேலை பார்த்தேன். அதிகாரிகள் மீட்டு பள்ளியில் சேர்த்தனர். தற்போது பி.ஏ. ஆங்கிலம் இலக்கியம் 3-ம் ஆண்டு படித்து வருகிறேன். அடுத்து பி.எட்., படித்து ஆசிரியையாக வேண்டும் என்பதே எனது விருப்பம்’ என்றார் அவர்.
முதல் பட்டதாரி
தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்த அஜித் என்ற மாணவர் பேசும்போது, ‘தந்தையுடன் மீன்பிடிக்கச் சென்றேன். அதிகாரிகள் மீட்டு படிக்க வைத்ததன் மூலம் இன்று பி.ஏ. ஆங்கிலம் இலக்கியம் படித்து வருகிறேன். எனது வாழ்க்கை திசை மாறியுள்ளது. எனது குடும்பத்திலேயே நான் தான் முதல் பட்டதாரி ஆகப்போகிறேன். நான் மட்டுமல்ல, எனது குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்றார் அவர்.
விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த வெற்றிவேல் என்ற மாணவர் கூறும்போது, ‘ செங்கல்சூளையில் வேலை பார்த்த நான் தற்போது பிளஸ் 2 முடித்துள்ளேன். அடுத்து கேட்டரிங் டெக்னாலஜி படிக்க விண்ணப்பித்துள்ளேன்’ என்றார்.
மீட்க கோரிக்கை
விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவி பேசும்போது, ‘எங்கள் ஊரில் 10-க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மில்லுக்கு வேலைக்கு செல்கின்றனர். அவர்களையும் மீட்க வேண்டும்’ என்றார்.
அந்த மாணவியை பாராட்டிய ஆட்சியர், அந்த கிராமத்தில் உள்ள அனைத்து குழந்தை தொழிலாளர்களையும் உடனடியாக மீட்டு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், குழந்தை தொழிலாளர்களாக மீட்கப்பட்டு பள்ளி, கல்லூரிகளில் படித்து வரும் மாணவ, மாணவியரை அதிகாரிகள் அடிக்கடி தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மேல்படிப்புக்கு அட்மிஷன், வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என, ஆட்சியர் உத்தரவிட்டார்.
379 பேர் படிக்கின்றனர்
பின்னர் ஆட்சியர் ரவிக்குமார் கூறும்போது, ‘தூத்துக்குடி மாவட்டத்தில் 12 குழந்தைத் தொழிலாளர் சிறப்பு பயிற்சி மையங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது 214 மாணவர்கள், 165 மாணவியர் என, மொத்தம் 379 பேர் சிறப்பு பயிற்சி மையங்களில் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ. 150 அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
2014-15 தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் மூலம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 154 குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டனர். அவர்களில் 85 பேர் சிறப்பு பயிற்சி மையங்களிலும், 69 பேர் முறையான பள்ளிகளிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்’ என்றார் ஆட்சியர்.
உறுதிமொழி ஏற்பு
தொடர்ந்து குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அனைத்து துறை அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மேலும் குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு கல்லூரிகளில் பயின்று வரும் 11 மாணவ, மாணவியருக்கு தலா ரூ.6 ஆயிரம் உதவித் தொகை, 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் 22 மாணவ, மாணவியருக்கு ஆங்கில அகராதிகள் வழங்கப்பட்டன.
தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் அ.ஆதிநாராயணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கு.தமிழ்செல்வராஜன், திட்ட கள அலுவலர் செல்வம், குழந்தைகள் நலக்குழு தலைவர் முருகேசன், தொழிலாளர் ஆய்வாளர் முகமது அப்துல் காதர் சுபைர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பரமசிவன், சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் காசிராஜன் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT