Published : 17 Jun 2015 08:08 AM
Last Updated : 17 Jun 2015 08:08 AM

சொன்னபடி ஆட்சியை தராத பாஜகவின் பொய் வேஷம்: இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா குற்றச்சாட்டு

சொன்னபடி தங்களால் ஆட்சியை தரமுடியவில்லை என்பதை மக்கள் மன்றத்தில் பாஜக அரசு நேர்மையுடன் ஒத்துக்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.

இதுதொடர்பாக ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

தமிழக தேர்தல் களத்தில் பணநாயகம் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி வருகிறதே?

ஆர்.கே.நகர் தொகுதியில், ‘கையூட்டு வாங்காமல் ஜனநாயகம் காத்திட வாக்களியுங்கள்’ என்று தேர்தல் ஆணையமே விளம்பரம் செய்திருக்கிறது. ஆக, தேர்தலில் அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையமே ஒத்துக்கொள்கிறது. ஆனாலும், அவர்களால் அதை தடுக்க முடியவில்லை. இது அனை வரும் வெட்கப்பட வேண்டிய விஷயம். தமிழகத்தைப் பொறுத்த வரை முக்கிய அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை பரப்பி வருகின்றன. இப்படி ஜனநாயகம் அவமதிக்கப் படுவது தடுக்கப்பட வேண்டும்.

நேற்றைக்கு வந்த கட்சிகள்கூட நாங்கள்தான் அடுத்த முதல்வர் என்று நெஞ்சை நிமிர்த்துகின்றன. ஆனால், பாரம்பரியமான கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அத்தகைய தன்னம்பிக்கை இல்லாமல் போனது ஏன்?

மற்ற கட்சிகளுக்கும் கம்யூ னிஸ்ட் இயக்கங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. நாங்கள், போகிற போக்கில் எதையும் சொல்லிவிட்டுப் போகமுடியாது. எங்களுக்கு அகில இந்திய அளவில் அமைப்பு இருக்கிறது. அமைப்பு ரீதியிலான ஒழுங்குக்கு கட்டுப்பட்ட கூட்டுத் தலைமையின்கீழ் நாங்கள் செயல்படுகிறோம். எத்தகைய முடி வாக இருந்தாலும் அந்தக் கூட்டுத் தலைமைதான் எடுக்கமுடியும்.

பாஜக அரசின் ஓராண்டு கால செயல்பாடுகள் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் செல்வாக்கை மீட்டுத் தந்திருக்கிறது என்று சொல்லலாமா?

அப்படிச் சொல்லமுடியாது. பாஜக அரசின் செயல்பாடுகள் தங்களுக்கு லாபம் அளிப்பதாக காங்கிரஸ் வேண்டுமானால் நினைத்துக் கொள்ளலாம். ஆனால், இதற்கு முன்பு, மக்கள் மத்தியில் காங்கிரஸ் ஏன் செல்வாக்கு இழந்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். நேரு கடைப்பிடித்த அடிப்படையான பொருளாதாரக் கொள்கையைவிட்டு புதிய பொருளாதாரக் கொள்கையை கடைப்பிடித்தது காங்கிரஸ். இந்த விஷயத்தில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் கொள்கை வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரே வருடத்தில் பாஜக அரசு மீது வெறுப்பு கொண்ட மக்கள், உண்மையான மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அத்தகைய மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறோம். அந்த மாற்றம் உடனே நடந்துவிடாது; ஆனால், நிச்சயம் ஒருநாள் நடக்கும்.

பிஹார் சட்டமன்றத் தேர்தலில் லாலு, நிதிஷ், முலாயம், காங்கிரஸ் என முக்கியக் கட்சிகள் பாஜக-வுக்கு எதிராக ஓரணியில் இணைந்திருப்பது குறித்து..?

பிஹார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வீழ்த்தப்பட வேண்டும் என்பது எங்களின் கொள்கை ரீதியிலான சிந்தனை. அங்கே பாஜக-வுக்கு எதிராக கூட்டணி சேர்வதில் இன்னமும் ஒரு தெளிவான நிலை எட்டப்படவில்லை. பிஹாரில் கம்யூனிஸ்ட்கள் கூட்டாக தேர்தலைச் சந்திப்பது குறித்து ஒரு சுற்று பேசி இருக்கிறோம். ஜூன் 30 மற்றும் ஜூலை 1,2 தேதிகளில் நடைபெறும் எங்களது தேசியக் குழு கூட்டத்துக்கு பிறகுதான் இந்த விஷயத்தில் தெளிவான முடிவு தெரியும்.

கிரிக்கெட் சூதாட்டத்தில் சம்பந்தப்பட்ட லலித் மோடிக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விசா வழங்க சிபாரிசு செய்திருப்பது குறித்து?

ஐ.பி.எல். கிரிக்கெட் என்பதே ஒரு பெரிய சூதாட்டம். இதை சூதாட்டமாக்கியதில் பாஜக-வுக்கும் காங்கிரஸுக்கும் முழுப் பொறுப்பு உண்டு. லலித் மோடி விவகாரத்துக்கு பதில் சொல்ல வேண்டியது பிரதமர்தான். பொருளாதார குற்றங்கள் தொடர்பான நடவடிக்கைகள் நிதி அமைச்சகத்தால் எடுக்கப்படுகின்றன. எனவே, இதற்கு நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் பதில் சொல்ல வேண்டும். சுஷ்மா எந்த நோக்கத்தில் அவருக்கு உதவியிருந்தாலும் பதில் சொல்லியே ஆகவேண்டும். அமைச்சர் பொறுப்பிலிருக்கும் சுஷ்மா ஸ்வராஜ், அமைச்சக நெறிமுறைகளுக்கு முற்றிலும் எதிரான காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார். எனவே, இதற்கு மேலும் அவர் அமைச்சர் பதவியில் தொடரக்கூடாது.

பாஜக அரசின் பலன்கள் மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் மக்களுக்கு தெரியவரும் என்கிறார்களே பாஜக தலைவர்கள்?

மூன்று ஆண்டுகள் கழித்து மேஜிக் செய்யப் போகிறார்களா? 1952-லிருந்து பொதுத் தேர்தலை சந்தித்து வருகிறது இந்தியா. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் முன்னேற்றத்தைக் காட்டுவோம் என்று சொல்வது அபத்தமானது. அப்படி என்ன அவர்கள் புதிய விதை போட்டிருக்கிறார்கள்.. மூன்று ஆண்டுகள் கழித்து முளைத்து பூத்துக் குலுங்குவதற்கு? பாஜக அரசு, வாக்குறுதி அளித்தபடி ஆட்சியை தரமுடியவில்லை என்பதை நேர்மையுடன் மக்கள் மன்றத்தில் ஒத்துக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து, பொய் வேஷம் போடக்கூடாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x