Published : 23 Jun 2015 09:33 PM
Last Updated : 23 Jun 2015 09:33 PM

ஜெ. வழக்கில் மேல்முறையீடு: விரைவாக விசாரிக்க ராமதாஸ் வேண்டுகோள்

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்திருப்பது பாராட்டத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், '’வருவாய்க்கு மீறிய வகையில் ரூ.66.65 கோடி சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. சுமார் 2700 பக்கங்கள் கொண்ட மேல்முறையீட்டு மனுவில், நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில் காணப்படும் குறைபாடுகள் குறித்து புள்ளி விவரங்களுடன் விரிவாக விளக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பது தான் காந்தியடிகளின் கொள்கை. அதாவது எந்த ஒரு வழக்கிலும் நீதி வழுவாமல் தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு அவர் கூறினார்.

ஆனால், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நீதித்துறை மீதான நம்பகத்தன்மையை ஆட்டம் காண வைத்த தீர்ப்பு ஆகும். எவ்வளவு வேண்டுமானாலும் ஊழல் செய்யலாம்; அந்த ஊழலுக்காக தண்டிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட நாட்களில் விடுதலை ஆகி, விட்ட பணியை மீண்டும் தொடரலாம் என்ற தோற்றம் ஏற்படுவதற்கு இந்தத் தீர்ப்பு காரணமாகிவிட்டது.

இத்தீர்ப்பு திருத்தப்படாவிட்டால் இந்தியாவில் ஊழல் என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக மாறிவிடும். இதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் உள்ள குளறுபடிகளை விளக்கி, அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யும்படி கர்நாடக முதலமைச்சருக்கும், சட்டத்துறை உயரதிகாரிகளுக்கும் கடிதம் எழுதினேன். அதையேற்று இத்தீர்ப்பை திருத்துவதற்காக மேல்முறையீடு என்ற முதல் அடியை கர்நாடகா எடுத்துவைத்திருப்பது பாராட்டத்தக்கது.

தவறாக அளிக்கப்பட்டத் தீர்ப்பின் பயனாக ஒருவர் மீண்டும் முதலமைச்சராகி, ஊழல்களையும், முறைகேடுகளையும் அரங்கேற்றுவதை அனுமதிப்பது பெரும் அநீதி ஆகும். அந்த அநீதி தமிழகத்தில் அரங்கேற்றப்பட்டு விட்டது. இந்த அநீதியை எவ்வளவு விரைவாக களைய முடியுமோ அவ்வளவு விரைவாக களைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சாதகமானத் தீர்ப்பை பெற்று விட்ட நிலையில், இவ்வழக்கை விசாரணை நீதிமன்றத்தில் இழுத்தடித்ததைப் போலவே, உச்சநீதிமன்றத்திலும் இழுத்தடிக்க ஜெயலலிதா தரப்பில் நிச்சயமாக முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்த முயற்சிகள் முறியடிக்கப்படுவதை பொறுத்து தான் இவ்வழக்கில் நீதி நிலை நாட்டப்படும்.

எனவே, இந்த மேல்முறையீட்டு மனுவை ஒரு குறிப்பிட்ட காலவரையரைக்குள் விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்கும்படி உச்சநீதிமன்றத்திடம் கர்நாடக அரசு முறையிட வேண்டும். ஒருவேளை விரைவான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், இவ்வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை பெறுவதற்கு கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x