Published : 01 Jun 2015 09:28 PM
Last Updated : 01 Jun 2015 09:28 PM

தொழிற்சாலைகள், வணிக மின் இணைப்புகளுக்கு 20 சதவீத மின் கட்டுப்பாடு முற்றிலும் நீக்கம்: முதல்வர் உத்தரவு

தமிழகத்தில் தொழிற்சாலைகள் மற்றும் வணிக மின் இணைப்புகளுக்கான 20 சதவீத மின் கட்டுப்பாடு முற்றிலுமாகவும் உச்சகட்ட நேரத்துக்கான 90 சதவீத மின் கட்டுப்பாடு செப்டம்பர் மாதம் வரையும் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு தரப்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ''தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மின் திட்டங்களின் காரணமாக மின் நிலைமை சீரடைந்துள்ளது. மின்வெட்டு பழங்கதையாய் போனது. கடந்த நான்கு ஆண்டுகளில் 4,991.5 மெகாவாட் அளவுக்கு கூடுதல் மின்சாரம் பெறப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி, வீடு மற்றும் இதர தாழ் மின்னழுத்த மின் இணைப்புகளுக்கு இருந்து வந்த வரையறுக்கப்பட்ட மின் தடை கடந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் முற்றிலும் நீ்க்கப்பட்டது. உயர் அழுத்த தொழிற்சாலை மற்றும் வணிக மின் இணைப்புகளுக்கு உச்சகட்ட நேரத்தில் ( மாலை 6 முதல் இரவு 10 மணி வரை) 90 சதவீதமும் மற்ற நேரங்களில் 20 சதவீதமும் மின் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளன.

இதில், 20 சதவீத மின் கட்டுப்பாட்டை ஜூன் 5-ம் தேதி முதல் முற்றிலுமாக நீக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் உயர் மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு உச்சகட்ட நேரத்தில் விளக்கு மற்றும் பாதுகாப்புக்காக 10 சதவீதம் மட்டுமே மின்சாரம் உபயோகிக்கலாம் என்ற 90 சதவீத கட்டுப்பாட்டையும் ஜூன் 5 முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை தளர்த்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்'' என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x