Published : 08 Jun 2015 09:41 AM
Last Updated : 08 Jun 2015 09:41 AM
ஆதரவற்ற சிறுவர்கள் பாஸ்போர்ட் பெற பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ், புகைப்பட சான்றிதழ், முகவரி சான்றிதழ் உள்ளிட்டவைகளை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும்.
இந்நிலையில், ஆதரவற்ற இல்லங் களில் வசிக்கும் சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களால் கைவிடப்பட்ட சிறுவர்களுக்கு உரிய பிறப்பு சான்றிதழ் இல்லாததால் அவர்களால் பாஸ்போர்ட் பெற முடியாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில், அவர்கள் பாஸ்போர்ட் பெற பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
பாஸ்போர்ட் விதி, 1980-ன் படி, 1989, ஜனவரி 26-ம் தேதிக்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் பெற அவர்களின் பிறப்பு சான்றிதழை அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்கள் நகராட்சி அதிகாரிகள் அல்லது பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் இருந்து பிறப்பு சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
இந்நிலையில், ஆதரவற்ற இல்லங்களில் வசிக்கும் சிறுவர் கள் உரிய பிறப்பு சான்றிதழ் இல்லாமல் உள்ளனர். இதேபோல் பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுவர்களுக்கும் பிறப்பு சான்றிதழ் இருப்பதில்லை. இதனால், அவர்கள் பாஸ்போர்ட் பெற முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. எனவே, அவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிப்பதில் இருந்து விலக்குகோரி ஆதரவற்றோர் இல்லங்கள், சிறார் விடுதி உரிமையாளர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களிடம் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன.
இக்கோரிக்கையை பரிசீலித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் 1989, ஜனவரி 26-ம் தேதிக்குப் பிறகு பிறந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் பெற பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. இதன்படி, 18 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற சிறுவர்கள் தங்கள் பள்ளியில் வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தாங்கள் வசிக்கும் ஆதரவற்ற இல்லங்கள் மற்றும் சிறார் விடுதிகளின் கண்காணிப்பாளர்களிடம் இருந்து அத்தாட்சி சான்றிதழை பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
18 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்றோர் நீதிமன்றம் மூலம் தங்களுடைய பிறப்புச் சான்றிதழை பெற்று சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம், அவர்களுடைய நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது.
இவ்வாறு பாலமுருகன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT