Published : 25 Jun 2015 01:25 PM
Last Updated : 25 Jun 2015 01:25 PM

தருமபுரியில் உயர் மின்னழுத்த பாதை அமைக்க வெட்டிய மரங்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை: விவசாயிகள் வேதனை

தருமபுரி மாவட்டம் பெரும்பாலை பகுதியில் உயர்மின்னழுத்த பாதை அமைக்கும் பணியின்போது வெட்டப்பட்ட மரங்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை என விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

தருமபுரி மாவட்டம் அதகப்பாடி அருகே துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மின் நிலையத்திற்கு மேட்டூர், நெய்வேலி, தூத்துக்குடி, கூடங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மின்சாரம் கொண்டு வர உயர் மின்னழுத்த பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. 2-க்கும் மேற்பட்ட பாதைகள் சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைக் கடந்து தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பெரும்பாலை பகுதிக்குள் நுழைகிறது.

இந்த மின் பாதைகள் விவசாய நிலங்கள் மீது அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையின் கீழே சாதாரண பயிர்களை மட்டுமே இனி பயிரிட வேண்டும் என்பது மின்வாரியம் மூலம் அப்பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் உத்தரவு. தென்னை மற்றும் இதர மரப்பயிர்கள் என ஓங்கி வளரும் எந்த பயிர்களையும் இந்த மின் பாதையின் கீழ் நடவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, உயர் மின்னழுத்த பாதை அமைக்கும்போதே அதன் வழித்தடத்தின் கீழே இருந்த மரங்கள் அனைத்தும் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன. இதில், தென்னை, வேம்பு, தேக்கு, பாக்கு உள்ளிட்ட பலவகை மரங்களும் அடங்கும். வெட்டும் முன்பாகவே மரத்திற்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்படும் என மின்வாரியம் மூலம் கூறப்பட்டது. ஆனால், சுமார் ஓராண்டு முடியும் தருவாயிலும் இதுவரை மரங்களுக்கான இழப்பீடு வழங்கப்படவில்லை.

சின்னம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ராசிராவுத்தனஅள்ளி பகுதி விவசாயிகள் சிலர் கூறும்போது, ‘எங்கள் பகுதியில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டது. ஆனால் அதற்கான இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை. டவர்களை பார்வையிட வரும் மின்வாரிய அதிகாரிகளிடமும் பலமுறை கேட்டுப் பார்த்து விட்டோம். அலுவலகம் சென்றும் கோரிக்கை வைத்தோம். ‘ஒரு வாரத்தில் வந்து விடும்’ என்ற பதிலை மட்டுமே தொடர்ந்து கூறி வருகின்றனர். எங்கள் பகுதி மட்டுமன்றி இந்த மின்பாதை அமைக்கப்பட்ட தருமபுரி மாவட்ட பகுதிகள் அனைத்திலும் இதே நிலை தான் நிலவுகிறது. பலன் தரும் மரங்களை இழந்ததுடன் அதற்கான இழப்பீடும் கிடைக்காமல் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்’ என்றனர்.

சின்னம்பள்ளி பகுதியில் உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கும் பணிக்காக வெட்டப்பட்ட மரங்கள், பின்னணியில் மின்பாதை உள்ளது.

வாகனங்களால் விளை நிலம் பாதிப்பு

விளை நிலங்களின் வழியே உயர் மின்னழுத்த பாதை அமைக்கும் பணியின்போது அதற்கான தளவாடங்கள் கொண்டு செல்லவும், கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்லவும், பெரிய அளவிலான கம்பிகளை இழுக்கவும் பல்வேறு வாகனங்களும், இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வாகனங்கள் சுற்றி வந்ததால் விளைநிலங்கள் முற்றிலும் இறுகிப் போயுள்ளது. தற்போது அந்த மண்ணை இலகுவாக்கவே பெருமளவில் செலவழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x