Published : 04 Jun 2015 01:24 PM
Last Updated : 04 Jun 2015 01:24 PM

கிரானைட் முறைகேடு: ஜூன் 12-க்குள் இறுதி அறிக்கை அளிக்க சகாயம் குழுவினர் தீவிரம்

கிரானைட் முறைகேடு குறித்து இறுதி அறிக்கையை தயார் செய்துவரும் சட்ட ஆணையர் உ.சகாயம் ஜூன் 12-ம் தேதிக்குள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க சட்ட ஆணையராக உ.சகாயத்தை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சகாயம் தனது குழுவினருடன் மதுரையில் 2014 நவம்பரில் விசாரணையை தொடக்கினார். குவாரிகளில் 2 மாதங்களுக்கும் மேல் ஆய்வு நடத்திய சகாயம் தொடர்ந்து பொதுமக்கள், அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். இதில் 600-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன. இவற்றை ஆய்வு செய்த சகாயம் கிரானைட் முறைகேடு எப்படியெல்லாம் நடந்தது?



முறைகேட்டின் மொத்த மதிப்பு, பாதிக்கப்பட்ட விவசாயம், நீராதாரம், வரலாற்று சின்னங்கள் உட்பட பல்வேறு தகவல்களை புள்ளிவிவரங்களுடன் அவர் சேகரித்துள்ளார். முறைகேடு நடக்க மூல காரணம், சட்ட விதிகளை மீறியது யார்? உடந்தையாக இருந்த மற்றும் தடுக்க தவறிய அதிகாரிகள் என பல்வேறு கோணங்களில் ஏராளமான தகவல்களை சகாயம் தயார் செய்துள்ளார். 1991 முதல் குவாரிகள் செயல்பட்ட பகுதிகளில் பணியில் இருந்த அதிகாரிகள் பட்டியலை பெற்றார். இந்த விவரங்கள் அடிப்படையில் இறுதி அறிக்கை தயாரிப்பு பணி தீவிரமாக நடந்துவருகிறது.

இது குறித்து சகாயம் விசாரணை குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரி ஒருவர் கூறியது:

ஜூன் 12-ல் கிரானைட் முறைகேடு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அன்றோ, அதற்கு முன்போ இறுதி அறிக்கையை சகாயம் தாக்கல் செய்வது உறுதியாகியுள்ளது.

அறிக்கை தயாரிப்பு பணி முடிந்துவிட்ட நிலையில் சரிபார்ப்பு பணி மட்டுமே நடைபெறுகிறது. இதனால் நேற்று முறைகேடு குறித்து புகார் அளிக்க வந்த ஒருவரிடம் மனு பெறப்படவில்லை.

இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும், நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும்வரை அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை ஆணையம் செயல்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x