Published : 04 Jun 2015 08:27 PM
Last Updated : 04 Jun 2015 08:27 PM
நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ், வே வே எக்ஸ்பிரஸ் நூடுல்ஸ், ரிலையன்ஸ் செலக்ட் இன்ஸ்டன் ட் நூடுல்ஸ், ஸ்மித் அண்ட் ஜோன்ஸ் சிக்கன் மசாலா ஆகிய நூடுல்ஸ் உணவுப்பொருட்களுக்கு தமிழ்நாட்டில் தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தி - மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''பன்னாட்டு நிறுவனமான நெஸ்லே இந்தியாவில் பல வகை உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
நெஸ்லே நிறுவனத் தயாரிப்பான மேகி நூடுல்ஸில் காரீயத்தின் அளவு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட அதிகமாக உள்ளதாக ஒரு சில மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக வந்த செய்தியை அடுத்து, முதல்வர் ஜெயலலிதா உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை மூலம் தமிழகத்தில் விற்கப்படும் நூடுல்ஸ் உணவுப் பொருட்களின் மாதிரியை எடுத்து சோதனை செய்து அவை உணவு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளுக்கேற்ப உள்ளதா என கண்டறியுமாறு உத்தரவிட்டார்.
இதனையடுத்து உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையரகம் மேகி நூடுல்ஸ் மற்றும் அதைப் போன்ற இதர நூடுல்ஸ் உணவுப் பொருட்களை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்தது.
தமிழ்நாடு முழுவதும் 65 உணவு மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. சென்னையில் எடுக்கப்பட்ட 17 உணவு மாதிரிகளில் 7 மாதிரிகளில் பரிசோதனைக்குப் பின் ஆய்வக முடிவுகள் பெறப்பட்டுள்ளன.
இந்த 7 மாதிரிகளில் 6 மாதிரிகளில் காரீயத்தின் அளவு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 லட்சத்திற்கு 2.5 அதாவது 2.5 parts per million (PPM) என்ற அளவை விட அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ், வே வே எக்ஸ்பிரஸ் நூடுல்ஸ், ரிலையன்ஸ் செலக்ட் இன்ஸ்டன் ட் நூடுல்ஸ், ஸ்மித் அண்ட் ஜோன்ஸ் சிக்கன் மசாலா ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவை விட காரீயத்தின் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
இதனை அறிந்த முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி மேற்சொன்ன நூடுல்ஸ் ற்பத்தி நிறுவனங்களின் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006, பிரிவு 30(2)(a) - ன் கீழ் இந்நிறுவனங்கள் நூடுல்ஸ் உணவுப் பொருட்களை தமிழ்நாட்டில் தயாரிப்பதற்கும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் முதற்கட்டமாக மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைத்து, உணவுப் பாதுகாப்பு ஆணையர் ஆணையிட்டுள்ளார்.
மேலும், இவ்வகை உணவுப் பொருட்களை விற்பனையிலிருந்து உடனடியாக திரும்பப் பெறுவதற்கும் இந்த உற்பத்தி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT