Published : 13 Jun 2015 01:10 PM
Last Updated : 13 Jun 2015 01:10 PM

குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் குரூப்-1 தேர்வுகளுக்கான வயது வரம்பை 35 வயதிலிருந்து 40 வயதாக உயர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு அரசுத் துறைகளில் குரூப்-1 தேர்வுகளுக்கான அறிவிக்கையை இம்மாத இறுதிக்குள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடவிருக்கிறது. துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர் உள்ளிட்ட பணிகளில் 55 காலியிடங்களை நிரப்புவதற்காக இந்தத் தேர்வுகள் நடத்தப்படவிருப்பதாக தேர்வாணையம் கூறியுள்ளது.

இந்தப் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பு இந்த ஆண்டாவது தங்களுக்கு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் மூத்த மாணவர்கள் காத்திருக்கின்றனர். காரணம் இத்தகைய போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கான வயது வரம்பு 35ஆக குறைக்கப்பட்டது தான்.

2001ஆம் ஆண்டு முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சியில் அரசு பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்ய தடை விதிக்கப்பட்டது. இதனால் 5 ஆண்டுகளாக போட்டித் தேர்வில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யும் வகையில் அனைத்து போட்டித்தேர்வுகளிலும் பங்கேற்பதற்கான வயது வரம்பு கடந்த 2006ஆவது ஆண்டில் 35 வயதிலிருந்து 40 ஆக உயர்த்தப்பட்டது.

எனினும், இந்த சலுகை 5 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2011 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. 5 ஆண்டுகள் பணி நியமனத்தடை இருந்ததால், அதை சரி செய்வதற்கான சலுகையையும் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்க முடியும் என்பது அரசுத் தரப்பில் முன்வைக்கப்படும் வாதம் என்ற போதிலும் அது நியாயமான வாதம் அல்ல.

அரசுப் பணி நியமனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை 2006 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட போதிலும், அதன் பின் ஆண்டு தோறும் குரூப்-1 தேர்வுகள் நடத்தப்படவில்லை.

2006 முதல் 2015 வரையிலான பத்து ஆண்டுகளில் 6 முறை மட்டுமே குரூப்-1 தேர்வு நடத்தப்பட்டிருக்கிறது. 2011, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் குரூப்-1 தேர்வு நடத்தப்பட்ட நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டில் அத்தேர்வுகள் நடத்தப்படவில்லை.

கடந்த ஆண்டு குரூப்-1 தேர்வுகள் நடத்தப்பட்டிருந்தால் கடந்த ஆண்டில் 35 வயதில் இருந்த ஒருவர் அத்தேர்வில் பங்கேற்றிருக்க முடியும். கடந்த ஆண்டு இத்தேர்வு நடத்தப்படாத நிலையில், அவருக்கு நடப்பாண்டுத் தேர்வில் வாய்ப்பளிப்பது தான் நியாயமானதாக இருக்கும். அதற்கு அதிகபட்ச வயது 35 என்ற நிபந்தனை தான் தடையாக உள்ளது. வயது வரம்பை 40 ஆக உயர்த்தினால் தொடர்ச்சியாக தேர்வு நடத்தாததால் பாதிக்கப்பட்ட அனைவரும் பயனடைவர்.

போட்டித்தேர்வுகளுக்கான வயது வரம்பு 40 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்பது முன்வைக்கப்படக் கூடாத கோரிக்கை அல்ல. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு முன்னோடியான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிகபட்ச வயது வரம்பை அண்மையில் 2 ஆண்டுகள் தளர்த்தியது. அதன்படி, அதிகபட்ச வயது பொதுப்பிரிவினருக்கு 30 வயதிலிருந்து 32 ஆகவும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33 வயதிலிருந்து 35 ஆகவும், பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு 35 வயதிலிருந்து 37 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், குரூப்-1 தேர்வுக்கான வயதுவரம்பு ஆந்திரா, குஜராத், மேற்குவங்கம், அசாம், திரிபுரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் 40 ஆகவும், அண்டை மாநிலமான கேரளத்தில் 50 ஆகவும் உள்ளது. தொடர்ச்சியாகப் போட்டித் தேர்வு நடத்தும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமும், பல்வேறு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்களும் மாணவர்களுக்கு அதிகபட்ச வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வயது வரம்பை தளர்த்தி வரும் நிலையில், தமிழக அரசு மட்டும் இந்த விஷயத்தில் பிடிவாதம் காட்டுவது சரியானதல்ல.

இந்தியாவின் மிக உயர்ந்த போட்டித் தேர்வான அகில இந்திய குடிமைப்பணி தேர்வுகளுக்கு அடுத்த படியாக உயர்ந்த போட்டித்தேர்வு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வு ஆகும். தமிழகத்தில் உயர் பதவிக்கு செல்ல நினைக்கும் மாணவர்களுக்கு இது ஒரு கனவு ஆகும். வயதுக் கட்டுப்பாடு காரணமாக இந்த கனவு கருகி விட அனுமதிக்கக் கூடாது. எனவே, விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் குரூப்-1 தேர்வுகளுக்கான வயது வரம்பை 35 வயதிலிருந்து 40 வயதாக உயர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும்'' என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x