Published : 30 Jun 2015 08:09 AM
Last Updated : 30 Jun 2015 08:09 AM

ஆர்.கே.நகரில் மறுவாக்குப்பதிவு: வாக்குச்சாவடி அலுவலர் மீது நடவடிக்கை - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

ஆர்.கே.நகர் தொகுதி 181-வது வாக்குச்சாவடி முதன்மை அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 27-ம் தேதி நடந்தது. 230 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது.

வாக்குச்சாவடி ஆவணங்களை தேர்தல் பார்வையாளர் ஜோதி கலஷ் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி விக்ரம் கபூர் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அப்போது 181-வது வாக்குச்சாவடியில், வாக்காளர் எண்ணிக்கையைவிட அதிக அளவில் வாக்குகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த வாக்குச்சாவடி யில் மட்டும் நேற்று மறு வாக்குப் பதிவு நடத்தப்பட்டது.

பழைய வண்ணாரப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் காலை 8 முதல் மாலை 5 மணி வரை மறு வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவையொட்டி, அந்தப் பள்ளிக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடியில் 85.54 சதவீத வாக்குகள் பதிவாகின.

வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடக்கும் ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டது.

இந்த வாக்குச்சாவடியில் தொகுதிக்கு தொடர்பில்லாதவர் களை வாக்களிக்க வாக்குச் சாவடி முதன்மை அலுவலர் அனு மதித்ததே மறு வாக்குப்பதிவுக்கு காரணம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, சம் பந்தப்பட்ட முதன்மை அலுவலர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:

இந்த வாக்குச்சாவடியில் 332 வாக்காளர்கள் மட்டும் உள் ளனர். இணையதளத்தில் வெளி யிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 423 வாக்காளர்கள் இருந்தனர். அது 2013-ல் தயாரிக்கப்பட்டது. அதன் பின் இருமுறை திருத்தங் கள் நடந்துவிட்டன.

முதலில் நடந்த வாக்குப்பதிவு குறித்து வாக்குச்சாவடி முதன்மை அதிகாரியிடம் விசாரித்து அறிக்கை தருமாறு மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி யிடம் கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் அறிக்கை அளித்த தும் அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x