Published : 27 Jun 2015 09:30 AM
Last Updated : 27 Jun 2015 09:30 AM

முதல் கட்ட கலந்த்யாய்வில் தேர்வான மாணவர்களுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கை ஆணை: சென்னையில் 24 மணி நேரமும் வழங்க ஏற்பாடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வில் தேர்வான மாணவர்களுக்கு சேர்க்கைக்கான ஆணை, சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 24 மணி நேரமும் வழங்கப்படுகிறது.

மருத்துவ படிப்பு சேர்க்கை இடங்களை நிரப்புவதற்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த 19-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடந்தது.

மொத்தம் 7 நாட்கள் நடந்த கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,257 எம்பிபிஎஸ் இடங்கள், 8 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசுக்கான 597 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 2,939 இடங்கள் நிரப்பப்பட்டன. பழைய மாணவர்களில் 544 பேர் கல்லூரிகளில் தங்களுக்கான இடங்களை தேர்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் அடிப்படையில் கல்லூரிகளில் சேருவதற்கான அனுமதி ஆணை வழங்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த வழக்கு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து தேர்வான மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேருவதற் கான அனுமதி ஆணை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் கூட்ட அரங்கில் நேற்று பிற்பகலில் நடந்தது.

சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மாணவர்களுக்கு சேர்க்கைக்கான அனுமதி ஆணைகளை வழங்கினார். அப்போது சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி மற்றும் தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் உஷா சதாசிவம் ஆகியோர் உடனிருந்தனர். கலந்தாய்வில் பங்கேற்று தேர்வான மாணவர்கள் தங்களுக்கான சேர்க்கை ஆணையை வாங்குவதற்காக வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணன் கூறியதாவது:

இந்த அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் கூட்ட அரங்கில், மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கான அனுமதி ஆணைகள் விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் எஸ்.எம்.எஸ். மூலமாக வும், தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான அனுமதி ஆணையை உடனடியாக வந்து

பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் >www.tnhealth.org என்ற இணையதளத்திலும் தெரிவித்துள்ளோம். இரவில் வரும் மாணவர்கள் இங்கேயே தங்கிச்செல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் உடனுக்குடன் தகவல்களைப் பெற வசதியாக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய சிறப்பு கவுன்ட்டர் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x