Last Updated : 27 Jun, 2015 04:56 PM

 

Published : 27 Jun 2015 04:56 PM
Last Updated : 27 Jun 2015 04:56 PM

நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பால் வறண்டு கிடக்கும் சின்னாறு அணை: விவசாயிகள் வேதனை

சூளகிரி அருகே விவசாயிகளின் பிரதான நீர் ஆதாரமாக விளங்கி வந்த சின்னாறு அணை, தற்போது நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பால் தொடர் மழையிலும் அணைக்கு நீர் வரத்து இன்றி வறண்டு காணப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏரி, குளம், அணைகள் அதிகம் உள்ளன. ஆனால் போதிய பராமரிப்பு இல்லாததால் நீராதாரங்கள் பாழடைந்து வருகிறது. நீர் வரும் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அணைகளுக்கு நீர் வரத்தும், தண்ணீர் தேங்குவதிலும் சிக்கல் உருவாகி வருகிறது. இதனால், அணைகள், தடுப்பணைகள் மற்றும் ஏரி, குளங்கள் மூலம் நீர்பாசனம் பெற்று வந்த நிலங்கள் தரிசாகவும், வீட்டு மனைகளாகவும் மாறி வருகிறது.

குறிப்பாக சின்னாறு அணை நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படுகிறது. சூளகிரி பகுதியில் நிலவும் சிதோஷ்ண நிலை காரணமாக அப்பகுதி விவசாயிகள் காய்கறிகள், நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். விவசாயத்திற்குத் தேவையான நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் கடந்த 1985-ம் ஆண்டு ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் சின்னாறு அணை கட்டப்பட்டது. சின்னாறு, பேரிகை ஏரி, பன்னப்பள்ளி ஏரி, அத்திமுகம் ஏரி உள்ளிட்ட சுற்றுவட்டார நீர் நிலைகள் மூலம் சின்னாறு அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதன் மூலம், அணையின் இடதுபுறம் மாரண்டப்பள்ளி, கிருஷ்ணகவுன்பள்ளி, தாசம்பட்டி, இண்டிகானூர் கிராமங்களும், வலதுபுறம் வேம்பள்ளி, கூராக்கனப்பள்ளி, கொள்ளப்பள்ளி, சென்னப்பள்ளி, சுண்டகிரி, அலகுபாவி, எலசமாக்கனப்பள்ளி, சின்னசென்னப்பள்ளி, பந்தர்குட்டை, கரகண்டப்பள்ளி(கடமடை) உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சின்னாறு அணையில் பொதுப்பணித்துறை மூலம் போதிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், அணைக்கு நீர் வரும் கால்வாய்கள், மழை நீர் வழிந்தோடும் கிளை கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால், சின்னாறு அணைக்கு நீர் வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்துப் பகுதியிலும் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையிலும் சின்னாறு அணையில் சொட்டு நீர் கூட இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:சின்னாறு அணை தொடர்ந்து வறண்டு காணப்படுவதால், விவசாயிகள் மாற்றுத் தொழிலுக்கு மாறி வருகின்றனர். தற்போது ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து சின்னாறு அணை அருகே உள்ள துரை ஏரி வரை கால்வாய் வெட்டப்பட்டு தண்ணீர் விடப்பட்டுள்ளது. துரை ஏரியிலிருந்து சின்னாறு அணைக்கு கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும். மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய்களை தூர்வார வேண்டும்.

இதன் மூலம் சின்னாறு அணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் செழிக்கும். மேலும், மீன்பிடி தொழிலும் வளர்ச்சி பெறும். அணையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகமும் புத்துயிர் பெற்று பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x