Published : 24 Jun 2015 06:32 PM
Last Updated : 24 Jun 2015 06:32 PM

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் காக்ளியார் இம்ப்ளாண்ட் சிகிச்சை: 3 குழந்தைகள் குணமடைந்தனர்

தென்மாவட்டங்களில் முதன்முறையாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்று குழந்தைகளுக்கு காக்ளியார் இம்ப்ளாண்ட் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்பு குழந்தைகள் நலமுடன் உள்ளனர்.

36 குழந்தைகளுக்கு சிகிச்சை

முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் சிறப்பு நிதி உருவாக்கப்பட்டு சிறுநீரக மாற்று சிகிச்சை, காக்கிளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சை போன்ற குழந்தைகளுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

காது கேளாத, வாய் பேசாத 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் காக்கிளியர் இம்ப்ளா ண்ட் கருவி பொருத்தப்படுகிறது. கடந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் 36 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையிலேயே காக்கிளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தென்தமிழகத்தில் முதன்முறை

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவான் கூறும்போது, ‘குழந்தைகளின் கேட்கும் திறனில் சிறிதளவு சந்தேகம் இருந்தாலும், பேசுவதற்கு காலதாமதமானாலும் உடனடியாக காது, மூக்கு, தொண்டை மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கடையல் பகுதியை சேர்ந்த அல்சாத் மகன் அமீர்( 2), புத்தன்துறையை சேர்ந்த மணிகண்டன் மகள் நிஷாந்தினி(3) குளச்சல் பகுதியை சேர்ந்த மைக்கேல் ராஜ் மகன் ரித்திஷ் சான்டரினோ (3) ஆகிய குழந்தைகள் காது கேளாமை, வாய் பேச முடியாமையால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அக்குழந்தைகளின் பெற்றோர் தனியார் மருத்துவமனைகளை அணுகியபோது ரூ.12 லட்சம் செலவாகும் என தெரிவித்துள்ளனர். மூன்று குழந்தைகளுக்கும் தென்தமிழகத்தில் முதன்முறையாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காக்ளியார் இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சை கடந்த 13-ம் தேதி மேற்கொள்ளப் பட்டது. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை காது, மூக்கு, தொண்டை பிரிவு தலைவர் மரு.பாரதி மோகன் தலைமையில் மருத்துவர்கள் ஜீடு சைரஸ், சுநீர், பிஜீ, மதன்ராஜ் மற்றும் மயக்கவியல் மருத்துவர்கள் வாசுகிநாதன், எட்வர்டு ஜான்சன், பிலிஸ்டன், ரெஜினிஷ் ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.

காக்ளியர் இம்ப்ளாண்ட் பொருத்திய இரண்டாவது வாரத்தில் குழந்தைக்கு காது கேட்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் பேசும் திறனை பொறுத்த வரையில் இயல்பான நிலையை அடைய ஒரு வருடத்துக்கு கேட்டல் மற்றும் பேசும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இக்குறைபாடு உள்ள குழந்தைக்கு ஆறு வயதுக்குள் சிகிச்சை மேற்கொண்டால் 100 சதவீதம் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது’ என்றார் ஆட்சியர்.

மருத்துவ கல்லூரி முதல்வர் வடிவேல் முருகன், கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x