Published : 25 Jun 2015 02:12 PM
Last Updated : 25 Jun 2015 02:12 PM

சவுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: ஜெயலலிதா வழங்கினார்

சவுதி அரேபியா நாட்டில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் போது மீனவர் மதிவளன் சுட்டுக் கொல்லப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த மீனவர் மதிவளன் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''சவுதி அரேபியா நாட்டில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் மதிவளன் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (25.6.2015) தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

சவுதி அரேபியா நாட்டில் உள்ள தனியாருக்குச் சொந்தமான மீன்பிடி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த கன்னியாகுமரி மாவட்டம், பொழிக்கரை கிராமத்தினை சேர்ந்த சிலுவை என்பவரின் மகன் மதிவளன், 29.5.2015 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஏழு மீனவர்களுடன் சவுதி அரேபியா நாட்டின் கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற செய்தியை அறிந்த முதல்வர் ஜெயலலிதா அகால மரணமடைந்த மீனவர் மதிவளன் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்தார்.

மரணமடைந்த மதிவளனின் உடலை அவரது சொந்த ஊருக்கு விரைவில் கொண்டு வரவும், அவர் பணிபுரிந்த நிறுவனத்திடமிருந்து அவரது குடும்பத்திற்கு இறுதி பணப் பயன்களை பெற்றுதர இந்திய தூதரகத்தின் மூலமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

மேலும், மதிவளன் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று 31.5.2015 அன்று அறிவித்திருந்தார்.

அதன்படி, உயிரிழந்த மீனவர் மதிவளன் மனைவி எஸ்.மேரி பெல்லாஜியிடம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்கி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x