Published : 07 Jun 2015 09:43 AM
Last Updated : 07 Jun 2015 09:43 AM

கோயம்பேடு மார்க்கெட்டில் லாரி மோதி தொழிலாளி பலி: ஆம்புலன்ஸ் மோதி மற்றொருவர் பலி

பெரம்பலூர் மாவட்டம் காடூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (50). கோயம்பேடு மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்துவந்தார். நேற்று அதிகாலை 3 மணியளவில் வெளி மாநிலங்களில் இருந்து லாரியில் வந்த காய்கறி மூட்டைகளை இறக்கி மார்க்கெட்டுக்குள் சென்று கொண்டிருந்தார். அப்போது அருகில் நின்ற லாரியை அதன் ஓட்டுநர் பின்னோக்கி இயக்கியுள்ளார். அப்போது பெரியசாமி மீது லாரி மோதியது. இதில் பெரியசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மற்ற தொழிலாளர்கள் அங்கு திரண்டு வந்து மார்க் கெட்டுக்கு வந்த வாகனங்களை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோயம்பேடு மார்க் கெட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், பலியான தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள், தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்களின் கோரிக் கைகளை நிறைவேற் றுவதாக அவர்கள் வாக்குறுதி தந்ததை தொடர்ந்து 4 மணிநேரம் நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது. விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் குபேந்திரனை போலீஸார் கைது செய்தனர். மேலும், தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்தும், இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் வரும் 8-ம் தேதி பேச்சு நடத்த சிஎம்டிஏ அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கிடையே பெரியசாமியின் உடலை எடுத்துச் செல்வதற்காக வந்த ஆம்புலன்ஸ், கோயம்பேடு மேம்பாலம் அருகே வந்தபோது விதி முறையை மீறி எதிர் திசையில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, காய்கறி வாங்கி இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த கொரட்டூர் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த வியாபாரி செல்வம் (40) மீது அந்த ஆம்புலன்ஸ் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கோடீஸ்வரனை போலீஸார் கைது செய்தனர். அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் 2 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x