Published : 08 Jun 2015 10:57 AM
Last Updated : 08 Jun 2015 10:57 AM

ஆர்.கே.நகரில் காங்கிரஸ் போட்டியில்லை: இளங்கோவன் அறிவிப்பு

ஜனநாயக, சட்டவிரோதமான அசாதாரண சூழலை தடுத்து நிறுத்திட தேர்தல் ஆணையம் முற்றிலும் தவறிவிட்ட காரணத்தினால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தமிழக காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பதாக அக்கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் நடைபெறும் அனைத்து இடைத்தேர்தல்களிலும் ஆளுங்கட்சி வேட்பாளார்கள்தான் வெற்றி பெற முடியும் என்ற நிரந்தர நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. சட்டத்தின்படி சுதந்திரமாக, பாரபட்சமின்றி, நடுநிலையோடு செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையமே இதற்கு துணைபோவது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

சென்னை, ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் அத்துமீறல்களையும், ஒருதலைபட்சமான நடவடிக்கைகளையும் ஆளுங்கட்சியினர் அறங்கேற்ற ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையை முன்கூட்டியே அறிந்த காரணத்தினால்தான், இத்தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால் சுதந்திரமாக பாரபட்சமின்றி தேர்தல் நடத்துவதற்கு வாக்காளார்களுக்கு பணம் விநியோகம் செய்வதை அனுமதிக்க மாட்டோம் என தேர்தல் ஆணையம் உறுதிமொழி அளித்தால் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் கட்சி பரிசீலிக்கும் என்று பகிரங்கமாக கூறியிருந்தோம். ஆனால், அதற்கு இதுவரை தேர்தல் ஆணையத்திடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

நாம் எதிர்பார்த்தபடியே இராதாகிருஷ்ணன் நகர் இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியின் அராஜகங்கள், அத்துமீறல்கள், கொள்ளையடிக்கப்பட்ட லஞ்சப் பணத்தின் மூலம் வாக்காளர்களுக்கு பண விநியோகம் என தங்கு தடையின்றி தேர்தல் ஆணையத்தின் ஆசீர்வாதத்தோடு பகிரங்கமாக நடக்க ஆரம்பித்துவிட்டன.

இன்னும் 20 நாட்களுக்கு தமிழக அமைச்சரவையும், அரசு எந்திரமும் கைகோர்த்து அங்கே செயல்பட போகின்றன. ஆளுங்கட்சியினர் எதையும் செய்வதற்கு தயாராகிவிட்டனர்.

எனவே, இத்தகைய ஜனநாயக, சட்டவிரோதமான அசாதாரண சூழலை தடுத்து நிறுத்திட தேர்தல் ஆணையம் முற்றிலும் தவறிவிட்ட காரணத்தினால் ராதாகிருஷ்ணன் நகர் இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x