Published : 27 Jun 2015 09:00 AM
Last Updated : 27 Jun 2015 09:00 AM

மெட்ரோ ரயில் பணியால் சென்ட்ரல் அருகே சாலையில் திடீரென 6 அடி பள்ளம்: பள்ளத்தில் சிக்கிய கார் கிரேன் மூலம் பத்திரமாக மீட்பு

மெட்ரோ ரயில் பணியால் சென்ட்ரல் அருகே ஜி.எச்.சாலையில் நேற்று திடீரென 6 அடியில் பள்ளம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ரூ.20 ஆயிரம் கோடி செலவில் இருவழித் தடங்களில் 45 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில், வண்ணாரப்பேட்டையில் தொடங்கி உயர் நீதிமன்றம், அண்ணாசாலை, சைதாப்பேட்டை வழியாக விமான நிலையம் வரை 24 கி.மீ தூரத்துக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக வண்ணாரப்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரையில் சுரங்கப்பாதை வழியாக ரயில்கள் இயக்கப்படவுள்ளது. இதற்காக, தரையில் சுமார் 80 முதல் 90 அடி வரை ஆழமாக தோண்டப்படுகிறது.

இந்நிலையில், மெட்ரோ ரயில் பணிகள் நடந்து கொண்டிருந்த போது, சென்ட்ரலில் இருந்து பிராட்வே செல்லும் வழியான ஜி.எச்.சாலையில் சென்னை மருத்துவக் கல்லூரி அருகே சாலையின் நடுப்பகுதியில் நேற்று மதியம் 2.45 மணியளவில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பள்ளம் சுமார் 6 அடி இருந்தது.

அந்த வழியே வந்த கார் ஒன்று இப்பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. உடனடியாக, மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கிரேன் மூலம் காரை பாதுகாப்பாக மீட்டனர். அதில் பயணம் செய்த 2 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

பள்ளம் ஏற்பட்டதால், சென்ட்ரல் பகுதியில் போக்குவரத்து மாற்று பாதைகளில் திருப்பி விடப்பட்டன. குறிப்பாக அரசு பொது மருத்துவமனை செல்வோரும், சென்ட்ரலில் ரயில் பிடிக்க சென்றவர்களும் பாதிக்கப்பட்டனர். பல்லவன் சாலையில் இருந்து பிராட்வே வரையில் இருபுறமும் சுமார் 2 மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மெட்ரோ ரயில்வே நிறுவன அதிகாரிகள் உடனடியாக அப்பகுதியை ஆய்வு செய்து சுமார் ஒன்றரை மணி நேரத்தில் பள்ளத்தைச் சீர்படுத்தினர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x