Published : 25 Jun 2015 02:53 PM
Last Updated : 25 Jun 2015 02:53 PM

காற்றாலை மின்சாரத்தை வாங்காததால் ரூ.720 கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ்

காற்றாலை மின்சாரத்தை வாங்காமல் தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதால் 4 மாதங்களில் அரசுக்கு ரூ.720 கோடி இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மின் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், மின்சாரக் கொள்முதலிலும் நடைபெறும் முறைகேடுகள் காரணமாக தமிழக அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்த வரிசையில் அடுத்த கட்டமாக காற்றாலை மின்சாரத்தை வாங்காமல் தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதால் 4 மாதங்களில் அரசுக்கு ரூ.720 கோடி இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளாக கடுமையான மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மின்சாரத் தேவையை சமாளிப்பதற்கான திட்டங்களை துல்லியமாக வகுத்து செயல்படுத்தியிருந்தால் தமிழகத்தில் மின் தட்டுப்பாட்டை போக்கியிருப்பது மட்டுமின்றி, மற்ற மாநிலங்களுக்கும் மின்சாரத்தை விற்பனை செய்திருக்க முடியும்.

ஆனால், தமிழக ஆட்சியாளர்களுக்கு தொலைநோக்கு பார்வையில்லாததாலும், மின்சாரக் கொள்முதல் மூலம் பெருமளவில் ஊழல் செய்ய வேண்டும் என்ற பேராசை காரணமாகவும் தனியார் நிறுவனங்களிடம் மின்சாரம் வாங்குவதில் தான் தமிழகஅரசு அதிக ஆர்வம் காட்டி வருகிறது. ஒரு யூனிட் ரூ.5.50 முதல் ரூ.15.14 வரை கொடுத்து தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை காற்றாலை மின் உற்பத்தி அதிக அளவில் இருக்கும். மேலும், காற்றாலை மின்சாரத்தின் விலை குறைவு என்பதால் இக்காலத்தில் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதை நிறுத்தி விட்டு, காற்றாலை மின்சாரத்தை கொள்முதல் செய்வதன் மூலம் குறைந்த செலவில் அதிக மின்சாரத்தைப் பெற முடியும்.

ஆனால், காற்றாலை மின்சாரத்தைக் கொள்முதல் செய்தால் பணப்பயன் கிடைக்காது என்பதால், காற்றாலை மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கு பதிலாக தனியாரிடமிருந்து அதிகவிலை கொடுத்து மின்சாரம் வாங்குவதற்கே தமிழக அரசு முன்னுரிமை அளிக்கிறது. பெயரளவில் மட்டுமே காற்றாலை மின்சாரம் வாங்கப்படுகிறது.

தமிழகத்தில் காற்றாலைகள் மூலம் தினமும் 25 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஒரு யூனிட் ரூ.3.20 என்ற விலையில் கிடைக்கும் நிலையில், இதை முழுமையாக வாங்குவது தான் லாபகரமானதாக இருக்கும். ஆனால், இந்த மின்சாரத்தை முழுமையாக வாங்காமல் ஒரு யூனிட் ரூ. 5.50 என்ற விலையில் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கப்படுவதால் ஒவ்வொரு நாளும் மின்சார வாரியத்திற்கு ரூ.60 லட்சம் வரை இழப்பு ஏற்படுகிறது. காற்றாலை மின்சாரம் கிடைக்கும் 4 மாதங்களில் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ஒட்டுமொத்தமாக ரூ.720 கோடி இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை 4992 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்படுவதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். இது முற்றிலும் பொய்யான தகவல் ஆகும். அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை ஒரு மெகாவாட் அளவுக்குக்கூட புதிய மின்திட்டங்கள் தயாரித்து செயல்படுத்தப்படவில்லை. பழைய திட்டங்கள் மூலமாக மட்டுமே இப்போது கூடுதல் மின்சாரம் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது.

தமிழகத்தில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு புதிய மின்திட்டங்கள் எதையும் செயல்படுத்த முடியாது என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கூறித்தான் தனியார் மின்சாரம் கொள்முதல் செய்ய அரசு ஒப்புதல் பெற்றுள்ளது. இந்த உண்மையை மறைத்து அதிமுக ஆட்சியில் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக ஜெயலலிதா கூறுவது மோசடியானதாகும்.

தமிழகத்தின் மின் தேவையில் கணிசமான அளவு தனியாரிடமிருந்து தான் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதற்காக நீண்டகால மற்றும் குறுகிய கொள்முதல் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்படுகின்றன. குறுகிய கால ஒப்பந்தங்கள் காற்றாலை மின்சாரம் கிடைக்கும் காலத்தை தவிர்த்து அக்டோபர் முதல் மே மாதம் வரை மட்டுமே செய்துகொள்ளப்பட வேண்டும்.

ஆனால், மின்வாரியம் அக்டோபர் முதல் செப்டம்பர் வரை மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய குறுகிய கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதால் தனியார் மின்சாரத்தை அதிகவிலை கொடுத்து வாங்கியே தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை வாங்காவிட்டால் அதற்காக அரசு அபராதம் செலுத்தவேண்டும். அதனால் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இன்னும் பல மடங்கு இழப்பு ஏற்படும் என்பது உறுதி.

இந்த நிலை எதேச்சையாக ஏற்பட்ட ஒன்றல்ல... காற்றாலை மின்சாரத்தை வாங்காமல், தனியார் மின்சாரத்தை அதிக அளவில் வாங்கி, அதன்மூலம் தாங்கள் லாபம் பார்க்க வேண்டும் என்பதற்காக ஆட்சியாளர்களும், சில அதிகாரிகளும் கூட்டணி அமைத்து செய்த ஒப்பந்தத்தால் ஏற்பட்ட விளைவாகும்.

ஏற்கெனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மின்சார வாரியத்தை மேலும் நலிவடைய வைக்கும் வகையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மற்றும் அதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும்'' என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x