Published : 02 Jun 2015 07:34 AM
Last Updated : 02 Jun 2015 07:34 AM

பக்தர்கள் வெள்ளத்தில் வரதராஜபெருமாள்: காஞ்சி கருடசேவை கோலாகலம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற் சவம் நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று கருடசேவை உற்சவம் நடைபெற்றது. இதில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தின் மீது அதிகாலை 4:40 மணிக்கு உற்சவர் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார். இதை தொடர்ந்து, காலை 5 மணிக்கு மேற்கு ராஜகோபுரத்தின் நுழைவுவாயிலில் தொட்டாச் சாரியாருக்கு காட்சியளிக்கும் வைபவம் நடந்தது. அதைத் தொடர்ந்து கருட வாகனத்தில் வரதராஜபெருமாள் கோபுர தரிசனம் நடந்தேறியது.

பின்னர், விளக்கடிகோயில் தெருவில் ஸ்ரீதுப்புல் வேதாந்த தேசிகர் சன்னதிக்கு சென்ற பெருமாளுக்கு நைத்தியம் மற்றும் சீர்வரிசைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றன. இதை யடுத்து, பிள்ளையார் பாளையம் வழியாக கச்சபேஸ்வரர் கோயிலை அடைந்த பெருமா ளுக்கு குடை மரியாதை வழங்கப் பட்டது.

பின்னர் புதிய குடைகளுடன், சங்கரமடம் அருகே உள்ள வாகன மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து ராஜவீதிகளில் வீதியுலா வந்து, பிற்பகல் 12:30 மணியளவில் கோயிலை அடைந்தார்.

கருடசேவை உற்சவத்தை யோட்டி, பெருமாள் செல்லும் வழிகள் மற்றும் நகரப் பகுதி முழுவதும் பக்தர்களுக்கு அன்ன தானம், நீர் மோர் வழங்கப்பட்டன. சுவாமி தரிசனம் செய்வதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளியூரை சேர்ந்த பக்தர்கள் நகரத்தில் குவிந்தனர்.

இரவு 7 மணிக்கு அனுமந்த வாகன உற்சவம் நடைபெற்றது. வரும் 5-ம் தேதி திருத்தேர் உற்சவமும் 7-ம் தேதி காலை தீர்த்தவாரியும் நடைபெறவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x