Published : 08 Jun 2015 09:05 PM
Last Updated : 08 Jun 2015 09:05 PM

அரசு பணிகளுக்கான நியமனத் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையைக் கடைபிடித்திடுக: ஸ்டாலின்

அரசு பணிகளுக்கான நியமனத்திற்கு நடைபெறும் தேர்வுகளில் முழுமையான வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்கும் படி அதிமுக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் இன்று எழுதியுள்ள முகநூல் பதிவில், ''எனது முகநூலில் வந்தவாசியில் வசிக்கும் திரு கே.பி. பிரசாந்த் என்பவர் பதிவு செய்திருந்த முக்கியமான விஷயத்தை படித்தேன். அதில் அவர், பள்ளிக் கல்வித்துறையில் உள்ள ஆய்வக உதவியாளர் பதவிக்கு நியமனம் செய்யப் போகிறோம் என்று அறிவித்தது.

அதை நம்பி தான் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வு பெற்றதாகவும், இப்போது திடீரென்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் "எழுத்து தேர்வின் மதிப்பெண்களை எடுத்து கொள்ளாமல், நேர்காணலில் எடுக்கும் மதிப்பெண்களை வைத்து தான் நியமனம் செய்வோம்" என்று கூறி வருவதாகவும் தனது மன வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.

பள்ளிக்கல்வித் துறையின் இந்த நடவடிக்கை தனது எதிர்காலத்தையே பாழ்படுத்தி விடும் என்றும் அச்சம் தெரிவித்திருந்தார். ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தமிழகம் முழுவதும் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு 85 லட்சம் பேர் காத்திருக்கிறார்கள்.

அது போன்ற சூழலில் அரசு பணிகளுக்கு நியமனம் செய்ய நடைபெறும் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மையை நிலை நாட்ட தமிழக அரசு முன்வராதது கவலையளிக்கிறது. 4,362 ஆய்வக உதவியாளர் பதவிகளை எழுத்து தேர்வு மூலமே நியமிக்க முடியும் என்றாலும், திடீரென்று அந்தப் பதவிகளுக்கும் நேர்காணல் நடத்தித்தான் நியமிப்போம் என்று கூறியுள்ளது முறையல்ல.

இந்த விஷயம் இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் விசாரணையிலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. படித்த இளைஞர்கள் அரசிடமிருந்து நேர்மையான, நியாயமான தேர்வு முறையை எதிர்பார்க்கிறார்கள். ஆகவே, அரசு பணிகளுக்கான நியமனத்திற்கு நடைபெறும் தேர்வுகளில் முழுமையான வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்கும் படி அதிமுக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x