Published : 29 Jun 2015 07:31 AM
Last Updated : 29 Jun 2015 07:31 AM

மன்னார் வளைகுடாவில் புதிய சங்கு உயிரினம் கண்டுபிடிப்பு

மன்னார் வளைகுடா கடலில் முதன்முறையாக சங்கு குடும்பத்தை சேர்ந்த ‘காக்ளஸ் பைரா திருவாங்கோரியா’ (Cochlespira Travancoria) என்ற அரிய வகை சங்கு உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மன்னார் வளைகுடாவில் பல்லுயிர்ப் பெருக்கம் அதிகரித் திருப்பதாக மூத்த கடல் ஆராய்ச்சியாளர் வைத்தீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நுண்ணுயிர் தொடங்கி பெரிய உயிரினங்கள் வரை விலங்கியல் ஆய்வாளர்களால் ஆண்டுதோறும் கண்டுபிடிக் கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஆய்வு மாணவர் கள், ஆய்வாளர்களைப் பொறுத்தவரை குறிப்பிட்ட ஒரு புதிய உயிரினத்தைக் கண்டுபிடிப்பது சாதனையாக கருதப்படுகிறது. கடந்த 22 ஆண்டு களாக கடல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவரும் மூத்த ஆராய்ச்சியா ளரான வைத்தீஸ்வரன், சங்கு குடும்பத்தைச் சேர்ந்த ‘காக் ளஸ்பைரா திருவாங்கோரியா’ என்ற உயிரினத்தை திருச்செந்தூர் அருகே மணப்பாடு கடலில் கண்டுபிடித்திருக்கிறார்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் வைத்தீஸ்வரன் கூறியதாவது:

சங்கு உயிரினங்கள் முது கெலும்பு இல்லாத உயிரினங்கள். இவை ‘டரிடே’ (Turridae) என்னும் குடும்பத்தை சேர்ந்தவை. இந்த குடும்பத்தில் மொத்தம் 670 வகை உயிரினங்கள் உள்ளன. தற்போது முதல்முறையாக கிழக்கு கடற்கரை பகுதியான மன்னார் வளைகுடாவில் ‘காக்ளஸ்பைரா திருவாங்கோரியா’ என்ற சங்கு உயிரினம் கிடைத்துள்ளது.

இது மெலக்ஸ் (Molluscs) என்ற வகையை சேர்ந்ததாகும். மொத்தம் 3.9 செ.மீ. நீளம், 10 கிராம் எடை கொண்டது. பழுப்பு நிறத்தில் 7 சுருள்களையும் கொண்டுள்ளது. திருச்செந்தூர் கடலில் மணப்பாடு பகுதியில் கடலின் அடியில் சுமார் 310 மீட்டர் ஆழத்தில் இது கிடைத்துள்ளது. இதற்கு முன்பாக 1969-ம் ஆண்டு கேரளத்தின் திருவனந்தபுரம் கடல் பகுதியில் 460 அடி ஆழத்தில் கடல் ஆய்வாளர் பவல் என்பவர் இதே உயிரினத்தைக் கண்டுபிடித்து பதிவு செய்துள்ளார்.

கண்ணில் மிக அரிதாகவே தென்படும் இந்த சங்கு உயிரினம் இந்தோ மேற்கு பசிபிக் கடல் பிராந்தியத்தில் தென்கிழக்கு கடல் பகுதி தொடங்கி கிழக்கு ஆப்பிரிக்காவின் ஜேன்ஜிபார் வரையிலும், இந்தோனேஷியா கடல் பகுதியிலும் வாழ்கின்றன. இந்தியாவில் இதற்கு முன்பாக புதிய சங்கு உயிரினங்களை 1898-ல் ஆல்காக், ஆண்டர்சன், 1969-ல் பவல், 1913-ல் ஸ்கிப்மென் ஆகிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தற்போது புதிதாக ஒரு சங்கு உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதன் மூலம் மன்னார் வளைகுடாவில் பல்லுயிர்ப் பெருக்கம் அதிகரித் திருப்பது தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x