Published : 15 May 2014 12:00 PM
Last Updated : 15 May 2014 12:00 PM

ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தில் பின்தங்கிய 16 மாநில மின்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி: மின் பொறியாளர்கள் அளித்தனர்

அனைத்து மின் விநியோகத் தடங்களையும் ஜி.ஐ.எஸ். மற்றும் ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தில் இணைக்கும் திட்டத்தில் பின்தங்கியிருக்கும் குஜராத் உள்ளிட்ட 16 மாநில மின் துறை அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

மத்திய அரசின் மறுசீரமைக்கப்பட்ட விரைவான மின்சார விரிவாக்க (ஆர்-ஏபிடிஆர்பி) திட்டத்தின்கீழ் தமிழகத்தில் பல்வேறு நவீன தொழில்நுட்பப் பணிகள் நடக்கின்றன. அனைத்து தொழில்நுட்பங்களையும் கொண்ட துணை மின் நிலையம், மின் வழித்தடம் ஆகியவற்றை இணைக்கும் ஸ்கேடா தகவல் மையம் தமிழகத்தில் அமைக்கப்படுகிறது.

2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 4 லட்சத்துக்கு அதிகமாக மக்கள் வசிக்கும் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி மற்றும் திருப்பூர் ஆகிய நகரங்களில் இந்த மையங்கள் அமைக்கப்படுகின்றன. சென்னையில் மின்வாரிய தலைமை அலுவலக வளாகத்தில் ஸ்கேடா மையம் அமைக்கும் பணிகள் 60 சதவீதம் முடிந்துள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ல் இதற்கான பணிகள் தொடங்கி, 6 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த மையத்தில் அனைத்து மின் விநியோக வழித்தடங்கள், துணை மின் நிலையங்கள், மின்னூட்டிகள், விநியோக டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்டவை ஜி.பி.எஸ். மற்றும் ஜி.ஐ.எஸ். தொழில்நுட்பத்தில் இணைக்கப்படும். மின் தடைகள் ஏற்படும்போது, எந்த வழித்தடத்தில் பிரச்சினை உள்ளது என்பதை இந்த மையத்திலிருந்து கண்டறிய முடியும். அதனால், உரிய உத்தரவுகள் பிறப்பித்து, தொழில்நுட்ப பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசிலிருந்து பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் மூலம் ரூ.182 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக திட்டப்பணிகள் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. விரைந்து முடிக்காவிட்டால் மத்திய அரசின் நிதியுதவி ரத்து செய்யப்படும் என்று எச்சரித்ததின் பேரில், தமிழக மின்துறை பணிகளை விரைவுபடுத்தியுள்ளது.

அதே நேரம் ஏபிடிஆர்பி திட்டப் பணிகளில் தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதில் குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், அஸ்ஸாம், பிஹார், ஜம்மு-காஷ்மீர், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தன. இதனால் குஜராத் உள்பட 16 மாநில அதிகாரிகளை சென்னைக்கு வரவழைத்து, தமிழக மின் துறை அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். இந்தப் பயிற்சியில், தமிழக மின்துறையின் செயல்பாடுகள், ஸ்கேடா தகவல் மையப் பணிகள், மின் விநியோக முறைகள், ஆன் லைன் மின் கட்டண முறை, மின் தடை நீக்கும் முறை குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x