Published : 08 Jun 2015 11:04 AM
Last Updated : 08 Jun 2015 11:04 AM
‘விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த எழிலன் சசிதரனை யார் என்றே எனக்குத் தெரியாது. அவரை இலங்கை ராணுவத்திடம் சரணடையுமாறு நான் கூறவில்லை’ என்று திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக் கும் இடையே கடுமையான போர் நடைபெற்றது. அப்போது புலிகள் அமைப்பின் தளபதிகளில் ஒருவரான எழிலன் சசிதரன் உள்ளிட்ட சிலர் ராணுவத்திடம் சரணடைந்தனர். ஆனால், இன்று வரை அவர்களைப் பற்றிய எந்த விவரங்களும் தெரிய வில்லை.
இந்நிலையில், போரின்போது காணாமல் போனவர்கள் தொடர் பாக இலங்கை முல்லைத் தீவு மாவட்ட நீதிமன்றத்தில் எழிலன் சசிதரனின் மனைவி ஆனந்தி அளித்த வாக்குமூலத்தில், ‘திமுக எம்.பி. கனிமொழி அளித்த உறுதிமொழியின் காரணமாகவே எனது கணவர் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தார்’ என தெரிவித்திருந்தார்.
இது தமிழகம், இலங்கை மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனந்தியின் இந்தக் குற்றச் சாட்டை கனிமொழி திட்டவட்ட மாக மறுத்துள்ளார். இது குறித்து ‘தி இந்து’விடம் பேசிய அவர், ‘‘இந்திய அரசின் சார்பிலோ அல்லது இலங்கை அரசின் சார்பிலோ யாரையும் சரணடையுமாறு சொல்லும் உரிமை எனக்கு இல்லை. இந்தக் கட்டுக்கதைக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. சசிதரனை யார் என்றே எனக்குத் தெரியாது. எல்லோருக்கும் தெரிந்திருக்க அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னணி தலைவர் அல்ல. அவரை சரணடையு மாறு அறிவுறுத்தினேன் எனக் கூறுவது முற்றிலும் தவறானது. இறுதிக்கட்ட போர் உச்சத்தில் இருந்தபோது யாராவது ராணு வத்திடம் சரணடையுமாறு அறிவுரை கூறுவார்களா?’’ என்றார்.
ஆனால், 'தி இந்து'வுக்கு ஆனந்தி அளித்த பேட்டியில், ‘‘ராணுவத்திடம் சரண் அடை வதற்கு முன்பாக விடுதலைப் புலிகள் அமைப்பின் திரிகோண மலை மாவட்டப் பொறுப்பாளரான எனது கணவர் எழிலன் சசிதர னுடன் செயற்கைகோள் தொலை பேசியில் கனிமொழி உரையாடி னார்’’ என தெரிவித்துள்ளார்.
டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து
இந்த விவகாரம் குறித்து திமுக செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்டபோது, ‘‘விடுதலைப் புலிகள் அமைப்பு இயங்கிய விதத்தில் இருந்தே அவர்கள் யாரு டைய அறிவுரையையும் ஏற்க மாட்டார்கள் என்பதை அனை வரும் அறிவர். கழுத்தில் சயனைடு குப்பியுடன் திரியும் ஒருவர், இலங்கையில் இருந்து செயற்கைக்கோள் தொலைபேசி யில் தொடர்புகொண்டு ராணு வத்திடம் சரணடைவது குறித்து கேட்பது சாத்தியம் இல்லாத ஒன்றாகும். இலங்கையில் போரை நிறுத்த இந்திய அரசு தலையிட வேண்டும் என தொடர்ந்து திமுக வலியுறுத்தி வந்ததை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்’’ என்றார்.
கனிமொழி மீது விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவரின் மனைவி குற்றம்சாட்டியிருப்பது திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT