Published : 05 Jun 2015 08:21 AM
Last Updated : 05 Jun 2015 08:21 AM

வேட்புமனுவை தாக்கல் செய்ய வேட்பாளர் நேரில் வரவேண்டிய அவசியமில்லை: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேட்பாளரே வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி வேட்பாளரால் நியமிக்கப்பட்ட முகவரோ அல்லது வேட்பாளரை முன்மொழிந்தவரோ வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம். ஆனால் மனுவை வேட்பாளர் தன் கைப்பட பூர்த்தி செய்திருக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறினார்.

சென்னை ஆர்.கே. நகர் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூன் 27-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.

தேர்தல் செலவினங்கள் தொடர்பான பார்வையாளர் மன்ஜித்சிங் நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். அவர் நேற்று தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவுடன் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து தேர்தல் செலவின விவரங்களை வேட்பாளர்கள் அளிப்பது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:

தேர்தல் செலவினம் குறித்த இறுதி பட்டியலை அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தேர்தல் முடிவு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். வேட்பு மனுதாக்கல் செய்துள்ள வேட்பாளரின் சொத்து விவரங்கள் அடங்கிய தகவல் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உடனடியாக வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x