Published : 23 Jun 2015 07:48 AM
Last Updated : 23 Jun 2015 07:48 AM

பெரியாறு அணையில் மூவர் குழு ஆய்வு: செய்தியாளர்களுக்கு தடை

கொட்டும் மழையில் முல்லை பெரியாறு அணையில் மூவர் குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது. ஆனால், செய்தி சேகரிக்க செய்தியாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

முல்லை பெரியாறு அணையில் ஆய்வு செய்ய மூவர் குழு தலைவர் எல்.ஏ.வி. நாதன், தமிழக பிரதிநிதி என்.எஸ். பழனியப்பன் ஆகியோர் நேற்று முற்பகல் 11 மணிக்கு தேக்கடி படகுத் துறைக்கு வந்து ஒரே படகில் அணைக்குச் சென்றனர். கேரள பிரதிநிதி குரியன் தனி படகில் சென்றார். தமிழகத்துக்கு சொந்தமான மற்றொரு படகில் தமிழக செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் அமர்ந்திருந் தனர். ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக செய்தி யாளர்கள் இருப்பதாகக் கூறி, படகை இயக்க ஓட்டுநர் மறுத்து விட்டார். உடனே தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு கைபேசி மூலம் செய்தியாளர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பின், உயர் அதிகாரிகள் கூறியதையடுத்து படகை ஓட்டுநர் இயக்கினார்.

பெரியாறு அணை பகுதியை ஆய்வுசெய்ய மூவர் குழுவினர் சென்றனர். அவர்களுடன் தமிழக, கேரள செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் செல்ல முயன்றபோது அங்கு இருந்த கேரள போலீஸார் அனுமதி மறுத்து விட்டனர். ஆனால், கேரளத்தின் பிரபல பத்திரிகையின் செய்தியாளர்களை மட்டும் கேரள நீர்வளத்துறை அதிகாரிகள் என்ற போர்வையில் ஆய்வுக்குழுவுடன் செல்ல அம்மாநில போலீஸார் அனுமதித்தனர்.

இதற்கிடையில், மூவர் குழுவினர் கொட்டும் மழையில் பெரியாறு அணை, பேபி அணையை பார்வையிட்டு, சுமார் 30 நிமிடத்திலேயே ஆய்வை முடித்து விட்டு திரும்பினர். ஆய்வு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர்கள் பதில் அளிக்க மறுத்து விட்டனர்.

அதன்பின் அணைப் பகுதியில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மூவர் குழுவினர் சிறிது நேரம் ஓய்வு எடுத்தனர். பின்னர், படகுத் துறைக்கு வந்து குமுளியில் மாலை 4 மணிக்கு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பொதுப்பணித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘பெரியாறு அணை அருகே உள்ள பேபி அணையை பலப்படுத்தி, பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அணையை பலப்படுத்த ரூ.7.85 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இதனால் அணையை பார்வையிட மத்திய நீர்வள ஆணையத்தின் அணை பாதுகாப்பு பிரிவு இயக்குநர் மீனாட்சிசுந்தரம் தலைமையில், குழுவினர் வந்திருந்தனர்.

மேலும் பெரியாறு அணை அருகே, கேரள அரசு புதிய அணை கட்ட ஆய்வுப் பணியை நடத்தி முடித்துள்ளதால், இது தொடர்பாக, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிவிடக் கூடாது என்பதற்காக மூவர் குழுவினர் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்து விட்டனர்’ என்றார்.

கேரள அதிகாரிகள் கெடுபிடி

அணை பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில், தமிழக அதிகாரிகள் அமர்ந்து ஓய்வு எடுக்க பிளாஸ்டிக் நாற்காலிகளை படகில் கொண்டு செல்ல முயன்றபோது கேரள வனத்துறையினர் தடுத்து விட்டனர்.

இதற்கிடையில், செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் தமிழகத்தில் இருந்து கேரள எல்லைக்குள் நுழைந்தபோது குமுளி சோதனைச் சாவடியில் கேரள போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அடையாள அட்டையைக் காட்டிய பிறகும், அவர்களது பைகளை திறந்து பார்த்து முழுமையாக சோதனையிட்ட பின்னரே அனுமதித்தனர். இதனால் செய்தியாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x