Published : 10 May 2014 04:28 PM
Last Updated : 10 May 2014 04:28 PM

இந்திய - இலங்கை மீனவர் பிரச்சனை: மே 12-ல் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை

இந்திய - இலங்கை மீனவர்களுக்கு இடையிலான இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை மே 12-ம் தேதி கொழும்பில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தமிழக, ஆந்திர கடலோர மீனவ பிரதிநிதிகள் நாளை கொழும்பு செல்கின்றனர்.

இது குறித்து இலங்கை மீன்வளத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நரேந்திர ராஜபக்ச கூறுகையில், இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்ட 24 மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் கைப்பற்றப்பட்ட விவகாரம் இந்த பேச்சுவார்த்தையை பாதிக்காது.

ஏற்கனவே முடிவான நிலையிலே மே 12- ம் தேதி இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். இந்திய மீனவ பிரதிநிதிகளின் வருகைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்றார்.

இரண்டாம்க்கட்ட பேச்சுவார்த்தையை முன்னிட்டு தமிழக மீனவ பிரதிநிதிகள் கொண்ட ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. கடந்த ஜனவரி 27-ம் தேதி சென்னையில் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து மார்ச் 13-ல் இரண்டாம்கட்ட பேச்சு வார்த்தை நடைபெறுவதாக இருந்தது. பல்வேறு காரணங்களால் மார்ச் 27-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினமும் பேச்சுவார்த்தை நடைபெற வில்லை.

இந்நிலையில் மே 12, 13-ம் தேதிகளில் இருதரப்பு மீனவர்கள் பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்று இலங்கை அரசுக்கு இந்திய அரசு அண்மையில் கடிதம் அனுப்பியது.

இதன்படி இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னேவின் அறிவுரைப்படி இரு தரப்பு மீனவர்களுக்கு இடையிலான இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை மே 12-ம் தேதி கொழும்பில் நடைபெறும் என்று அந்த நாட்டு மீன்வளத் துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லும் போது, இலங்கை கடற்படையால் தாக்கப்படுகின்றனர். அவர்களின் வலைகள், படகுகள் சேதப்படுத்தப்பட்டு, மீன்கள் பறித்து செல்லப்படுகின்றன என தமிழக மீனவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வருவதால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று இலங்கை கடற்படை கூறியது. இதேபோல், இலங்கை மீனவர்களும் இந்திய கடல் எல்லைக்குள் வரும் போது, இந்திய கடற்படையால் சிறை பிடிக்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இருதரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை மே 12- ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x