Published : 06 May 2014 08:22 AM
Last Updated : 06 May 2014 08:22 AM
இந்த ஆண்டு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்காதது ஏன்? என்பதற்கு தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகி விளக்கம் அளித்தார்.
மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர்கள், சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினர் போன்றோருக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதற்கான கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளி களுக்கு அரசு வழங்கிவிடும்.
ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக அரசு கல்விக்கட்டணம் எதுவும் வழங்கவில்லை என்று தனியார் பள்ளிகள் தொடர்ந்து புகார் தெரிவித்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில், தனியார் பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடந்தது.
25 சதவீத இடஒதுக்கீடு கிடையாது
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தி ஏழை மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டனர். ஆனால், அரசிடமிருந்து வர வேண்டிய கல்விக்கட்டணம் இன்னும் வரவில்லை.
கட்டண பாக்கி
அட்மிஷன் விஷயத்தில் மிகவும் கறாராக நடந்து கொண்ட கல்வித்துறை அதிகாரிகள், கட்டணத்தை திரும்பப் பெற்றுத்தருவதில் மட்டும் மெத்தனமாக நடந்துகொள்கிறார்கள்.
எனவே, 2 ஆண்டு கட்டண பாக்கியை அரசு தராததால் இந்த ஆண்டு 25 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில்லை என்று முடிவெடுத்துள்ளோம்.
கர்நாடக மாநிலத்திலும் இதேபோல் தனியார் பள்ளி கள் முடிவுசெய்துள்ளன. இது தொடர்பான வழக்கில் தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக நீதி மன்றம் தீர்ப்பு வந்துள்ளது. பல மாநிலங்களில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்படவே இல்லை. இவ்வாறு நந்தகுமார் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT