Published : 14 Jun 2015 10:09 AM
Last Updated : 14 Jun 2015 10:09 AM

ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு லட்டு கொடுத்து விழிப்புணர்வு: சிறுவனுக்கு நீதிபதி பாராட்டு

ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டியவர்களுக்கு லட்டு கொடுத்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட சிறுவனை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் நேரில் அழைத்து பாராட்டினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் படூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் ஆகாஷ்(5). ஒன்றாம் வகுப்பில் படிக்கும் இந்த சிறுவன் கடந்த ஓராண்டாக ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பிரச்சாரம் செய்து வருகிறான். இந்நிலையில் ஜூலை 1-ம் தேதி முதல் தமிழகத்தில் இரு சக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் சமீபத்தில் உத்தரவிட்டார்.

இதையடுத்து ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே கடந்த வாரம் ஆகாஷ் மேற்கொண்டான். காந்திசிலை சிக்னல் அருகே கையில் லட்டு மற்றும் துண்டு பிரசுரங்களுடன் நின்ற ஆகாஷ், ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு லட்டும், அணியாமல் வருபவர்களுக்கு துண்டு பிரசுரமும் கொடுத்தான். ஆகாஷின் இந்த முயற்சியை பலரும் பாராட்டினர். இந்நிலையில், ஆகாஷின் விழிப்புணர்வு பிரச்சாரத்தைப் பற்றி கேள்விப்பட்ட நீதிபதி கிருபாகரன் அவனை தனது வீட்டுக்கு வரவழைத்து பாராட்டினார்.

இந்த சந்திப்பு குறித்து ஆகாஷின் தந்தை ஆனந்தன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

நான், எனது மனைவி மற்றும் மகன் ஆகாஷ் ஆகிய மூவரும் ஒரு வருடத்துக்கு முன்பு பைக்கில் சென்றபோது எங்கள் முன்னால் பைக்கில் சென்ற ஒரு நபர் எங்கள் கண் எதிரிலேயே சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதைக் கண்ட ஆகாஷ், அந்த நபர் எப்படி உயிரிழந்தார் என்று என்னிடம் கேட்டான். அதற்கு நான் அவர் ஹெல்மெட் அணியாததுதான் காரணம் என்று கூறினேன். இதையடுத்து, ஹெல்மெட் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவனது மனதில் தோன்றியது. இதற்கு நாங்கள் உதவி செய்தோம்.

கடந்த ஓராண்டாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், புதுச்சேரி, திருப்பதி, சித்தூர் ஆகிய ஊர்களில் சுமார் ஒரு லட்சம் விழிப்புணர்வு பிரசுரங்களை ஆகாஷ் விநியோகித்துள்ளான். இதுகுறித்து தகவல் அறிந்த நீதிபதி கிருபாகரன் இன்று (நேற்று) ஆகாஷை தனது வீட்டுக்கு வரவ ழைத்து பாராட்டு தெரிவித்தார். அப்போது, ஆகாஷின் முயற்சியை பாராட்டிய நீதிபதி, ஆகாஷ் போல் 100 குழந்தைகள் இதுபோன்ற விழிப்புணர்வு செயல்களில் ஈடுபட்டால் நம் நாடு சிறப்பான வளர்ச்சி பெறும் என்று பாராட்டினார். இவ்வாறு ஆனந்தன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x