Published : 16 Jun 2015 09:13 AM
Last Updated : 16 Jun 2015 09:13 AM

வேட்பாளர்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை: அதிகார துஷ்பிரயோகம் ஆர்.கே.நகரில் மிகுந்துள்ளது - இந்திய கம்யூ. தேசிய செயலாளர் டி.ராஜா குற்றச்சாட்டு

ஆர்.கே. நகர் தொகுதியில் வேட்பாளர்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அங்கு பண பலம், அதிகார துஷ்பிரயோகம் மிகுந்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும், எம்.பி.யுமான டி.ராஜா புகார் கூறியுள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சி.மகேந்திரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து டி.ராஜா நேற்று மாலை வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். முன்னதாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்தை கருத்தில்கொண்டு அதை பாதுகாக்கும் நோக்கில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. தமிழக நலன், ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட கொள்கைகளுக்காக நாங்கள் வேட்பாளரை அறிவித்துள்ளோம். இது ஜனநாயகத்தை பாதுகாக்கிற அரசியல் போராட்டம் ஆகும். இதற்கு ஆர்.கே.நகர் மக்கள் ஒத்துழைப்பு அளிப்பார்கள். பண பலத்தையும், அதிகார பலத்தையும் முறியடிக்க தொகுதி மக்கள் தயாராகிவிட்டனர்.

தொகுதிக்குள் நடக்கும் முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புகாருக்காக காத்திருக்காமல், தேர்தல் ஆணையம் தானாக முன்வந்து செயல்பட வேண்டும். தேர்தல் நடைமுறை தொடங்கியதுமே, அந்தத் தொகுதியை தேர்தல் ஆணையம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். இவை அனைத்தும் இந்திய அரசியல் சட்டத்திலேயே கூறப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் பணபலம், அதிகார துஷ்பிரயோகம் மிகுந்துள்ளது. வேட்பாளர்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. நாங்கள் சில கொள்கைகளை முன்வைத்தே வேட்பாளரை அறிவித்துள்ளோம். அந்த கொள்கைகள் நியாயமானது என்று நினைக்கும் அரசியல் கட்சிகள் எங்களை ஆதரிக்க வேண்டும்.

பொதுவாக தேர்தலில் பணம் ஆயுதமாக உள்ளது. இடைத்தேர்தலில் அது பேராயுதமாக உள்ளது. தேர்தல் ஆணையத்தால் அதைத் தடுக்க முடியவில்லை. தற்போதைய தேர்தல் முறையையே மாற்றி அமைக்க வேண்டும். அதிகார வர்க்கத்தினரின் அரசியல் மற்றும் நிர்வாக சக்தி தேர்தலில் நுழையக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

வேட்பாளர் சி.மகேந்திரன் கூறும்போது, ‘‘ஆர்.கே.நகர் தொகுதிக்குள் சுதந்திரமாக பிரச்சாரம் செய்ய முடியவில்லை. நாங்கள் வாக்கு சேகரிக்கும் இடத்துக்கு அவர்கள் வருவதால் பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. 4 பக்கமும் ஆளுங்கட்சியினர் ஊர்வலம் வருகின்றனர். தொகுதியில் மக்களே அச்சப்படும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x