Published : 10 Jun 2015 07:30 PM
Last Updated : 10 Jun 2015 07:30 PM

தென்னிந்தியாவில் இனி ஏர்செல் ரோமிங்கில் இலவச இன்கமிங்

தென்னிந்தியாவில் ரோமிங்கில் இருப்பவர்களுக்கு இலவச இன்கமிங் அழைப்புகள் பெறும் வசதியை ஏர்செல் புதன்கிழமை முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருக்கும் ஏர்செல் வாடிக்கையாளர்கள் இந்த 6 மாநிலங்களுக்குள் எங்காவது சென்றால், அவர்களுக்கு வரும் இன்கமிங் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது.

இது குறித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஏர்செல் வர்த்தகப் பிரிவுத் தலைவர் கே.சங்கர நாராயணன் கூறியது: "தென்னிந்தியாவில் உள்ள 4 கோடி ஏர்செல் வாடிக்கையாளர்களில் 30 சதவீதம் பேர் ரோமிங் வசதியை பயன்படுத்துகின்றனர். 2010-ம் ஆண்டில் ஒரு மாதத்துக்கு சராசரியாக ஒரு வாடிக்கையாளர் 346 நிமிடங்கள் பேசியுள்ளார். அதில் 10 நிமிடங்கள் ரோமிங் அழைப்பாகும். 2014-ம் ஆண்டில் ஒரு வாடிக்கையாளர் சராசரியாக 383 நிமிடங்கள் பேசியுள்ளார். அதில் 80 நிமிடங்கள் ரோமிங் அழைப்பாகும். அலைபேசியில் பேசும் நேரமும், ரோமிங் அழைப்புகள் பேசும் நேரமும் அதிகரித்துள்ளன.

குறிப்பாக ஒசூர், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், திருப்பதி, கோவை, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய பகுதிகளில் ரோமிங் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது.

ஆனால், இன்னமும் ரோமிங் வாடிக்கையாளர்களில் 40 சதவீதம் பேர் தங்களுக்கு வரும் இன்கமிங் அழைப்புகளை எடுப்பதே இல்லை. ஏனென்றால், இன்கமிங் கால்களுக்கு பொதுவாக ரோமிங்கில் ஒரு நிமிடத்துக்கு 45 பைசா கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ரோமிங் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், பலர் இன்கமிங் அழைப்புகளை எடுப்பதில்லை என்பதால், தென்னிந்தியாவில் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு இன்கமிங் அழைப்புகள் வியாழக்கிழமை முதல் இலவசமாக வழங்கப்படுகின்றன. இது பழைய, புதிய, ப்ரீ-பெய்ட், போஸ்ட்-பெய்ட் என அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.

இதற்காக வாடிக்கையாளர்கள் புதிய ரீசார்ஜ் எதுவும் செய்ய வேண்டாம், எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டாம். ஏர்செல் வாடிக்கையாளர்கள் வேறு மாநிலத்துக்கு செல்லும் போது தானாகவே இந்த வசதி அவர்களுக்கு வழங்கப்படும். இதனால் சொந்த ஊரிலிருந்து வரும் முக்கியமான அழைப்புகளை தவிர்க்காமல் இருக்கலாம்.

ரோமிங்கில் அவுட்கோயிங் அழைப்புகளுக்கு ஒரு நிமிடத்துக்கு ரூ.1.15 வசூலிக்கப்படுகிறது. அது தற்போது ஒரு நொடிக்கு ஒரு பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வசதியும் வாடிக்கையாளர்களுக்கு தானாகவே கிடைத்து விடும். ஏர்செல் மூலம் வேறு நெட்வொர்க் வாடிக்கையாளர்களை அழைத்தாலும் இதே கட்டணங்கள் பொருந்தும்.

குறுஞ்செய்திகளுக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்த கட்டணங்கள் எப்போதும் போல் பொருந்தும்" என்றார் அவர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x