Published : 04 Jun 2015 08:13 AM
Last Updated : 04 Jun 2015 08:13 AM

கருணாநிதியின் 92-வது பிறந்த நாள் கொண்டாட்டம்: தொண்டர்களிடம் 70 நிமிடங்கள் வாழ்த்து பெற்றார்

திமுக தலைவர் கருணாநிதி நேற்று தனது 92-வது பிறந்த நாளை கொண்டாடினார். அதிகாலை 4.45 மணிக்கு சி.ஐ.டி. காலனியில் உள்ள வீட்டில் தாய் அஞ்சுகம், தந்தை முத்துவேலர் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

துணைவி ராசாத்தி அம்மாள், மகள் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோர் கருணாநிதிக்கு வாழ்த்து தெரி வித்தனர். பின்னர், சி.ஐ.டி. காலனி வீட்டு வளாகத்தில் மரக்கன்றை அவர் நட்டார்.

அதன் பிறகு அதிகாலை 5.10 மணிக்கு கோபாலபுரம் வந்த கருணாநிதிக்கு மனைவி தயாளு அம்மாள், மகள் செல்வி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, ஆற்காடு வீரா சாமி, பொன்முடி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திலும், வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். பெரியார் திடலுக்கு வந்த கருணாநிதியை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

அங்கிருந்து கோபாலபுரம் சென்ற கருணாநிதிக்கு காங்கிரஸ் அகில இந்தியச் செயலாளர் சு.திருநாவுக்கரசர், தமாகா துணைத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, சுப.வீரபாண்டியன், கவிஞர்கள் வைரமுத்து, மனுஷ்யபுத்திரன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

அறிவாலயத்தில் தொண்டர்கள்

காலை 10.55-க்கு அண்ணா அறிவாலயம் வந்த கருணாநிதியை திமுக தொண்டர்கள் மேளதாளங் கள் முழங்க வரவேற்றனர்.

காலை 11 மணி முதல் பகல் 12.10 வரை கலைஞர் அரங்கில் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளின் வாழ்த்துகளைப் பெற்றார். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் மற்றும் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

ஆளுநர் கே.ரோசய்யா, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வாழ்த்துச் செய்தியும் பூங்கொத்தும் அனுப்பியிருந்தனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, மூத்த தலைவர் இல.கணேசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர். பாமக நிறு வனர் ராமதாஸ், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.

கோபாலபுரம் இல்லத்தில் மாலை 5 மணிக்கு தமிழக காங் கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங் கோவன், ஆ.கோபண்ணா ஆகி யோர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். கருணாநிதியும், இளங்கோவனும் சுமார் 10 நிமிடங்கள் தனியாக ஆலோசனை நடத்தினர்.

விழா துளிகள்

அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, ‘‘கனவு கண்ட நான் விழித்துக் கொண்டேன். ஆனால், மக்கள் இன்னும் விழிக்கவில்லை’’ என்றார்.

காலை 11 முதல் பகல் 12.10 மணி வரை தொண்டர்கள், நிர்வாகிகளிடம் கருணாநிதி வாழ்த்து பெற்றார். இதனால் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் அவரை நேரில் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மாம்பழக் கூடைகள், வாழைத்தார்கள், பலாப்பழங்கள், ஆடு, வேட்டி, துண்டு, சால்வைகள் என பல்வேறு பொருள்களை கருணாநிதிக்கு பரிசாக வழங்கினர். ரூ. 10, 20, 50, 100, 500, 1000 ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட மாலைகள், விதவிதமான மலர் மாலைகள், ஆள் உயர ரோஜா மாலைகளையும் வழங்கினர். இணையதளம், சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல் மூலம் லட்சக்கணக்கான தொண்டர்கள் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிறந்த நாளை முன்னிட்டு கவிஞர் வாலி எழுதி, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த, ‘வாவா தலைவா வணக்கம் வணக்கம்’ என்ற பாடல் கருணாநிதியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x