Published : 26 Jun 2015 10:09 AM
Last Updated : 26 Jun 2015 10:09 AM
சென்னையில் காற்று சுவாசிக்க உகந்த நிலையில் இல்லை. அதனால் வாகனங்களுக்கான புகை சான்று கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் வலுப் பெற்று வருகிறது.
நாட்டில் உள்ள பெருநகரங்களில் நாளுக்கு நாள் காற்று மாசுவின் அளவு கூடிக்கொண்டே செல்வதால், அதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சென்னை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட 12 நகரங்களில் காற்றின் தரத்தை தொடர்ந்து கண்காணித்து, தேசிய காற்று தரக் குறியீடு பட்டியலை தயாரித்து வருகிறது.
தான் சுவாசிக்கும் காற்றின் தரத்தை பற்றி தெரிந்துகொள்வது பொதுமக்களின் உரிமை எனக்கூறி காற்று தர பட்டியலை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதன் இணையதளத்தில் மே 1-ம் தேதி முதல் தினமும் வெளியிட்டு வருகிறது.
சென்னையில் ஆலந்தூர் பேருந்து பணிமனை, ஐஐடி வளாகம், மணலி ஆகிய 3 இடங்களில் காற்றின் தரம் கணக்கிடப்படுகிறது. கடந்த மே மாதத்தில் சென்னையில் காற்றின் தரம், 3 நாட்கள் திருப்திகரம், 22 நாட்கள் மிதம், 4 நாட்கள் மோசம் என இருந்துள்ளது.
பெங்களூர் போன்ற நரங்களில் நன்று, திருப்திகரம் என்றே அதிகம் வருகிறது. ஆனால் சென்னையில் அதிக நாட்கள் மிதம் என்றே வந்துள்ளது. காற்றின் மாசு இவ்வாறு இருந்தால் குழந்தைகள் முதியவர், இதய நோயாளிகள், நுரையீரல் நோயாளிகள், ஆஸ்துமா நோயாளிகள் ஆகியோர் மூச்சு விடுவதில் சிரமப்படுவார்கள் என்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியமே அதன் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் 4 நாட்களில் காற்றின் தரம் மோசம் என பதிவாகியுள்ளது. தொழிற்சாலைகளுக்கு அடுத்தபடியாக வாகனங்கள் வெளி யிடும் புகையால் தான் அதிக காற்று மாசு ஏற்படுகிறது. இது தொடர்பாக வியாசர் பாடியைச் சேர்ந்த வாகன ஓட்டி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘அண்மைக் காலமாக முறையாக பராமரிக்கப்படாத வாகனங்கள் அதிக புகையை வெளியிட்டவாறு செல்கின்றன. அவற்றின் பின்னால் சென்றால் கடும் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.
குறிப்பாக ஆட்டோக்களில் இருந்து புகை அதிகமாக வருகின்றன. வாகனங்களுக்கு புகை சான்று கட்டாயமாக்கப்பட வேண்டும். இதற்கென விதி இருந்தும் நடை முறையில் இல்லை. அதனால் சென்னையில் காற்றை சுவாசிக்க முடியாத நிலையில் உள்ளது’’ என்றார்.
வாகனங்களுக்கான புகை சான்று கட்டாயமாகுமா என்று போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
வாகன புகை சான்று இல்லை என்றால் முதல் முறை ரூ.1000, 2 அல்லது அதற்கு மேல் பிடிபட்டால் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தமிழகத்தில் போக்குவரத்து துறை மூலமாக கடந்த 2013-14-ல் 36 ஆயிரம் வாகனங்களுக்கும், 2014-15-ல் 44 ஆயிரம் வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஹெல்மெட் கட்டாயம் என சட்டம் இருந்தும், அது அமலுக்கு வரவில்லை. நீதிமன்றம் மற்றும் அரசின் நடவடிக்கையால் தற்போது அபராதம் மட்டுமில்லாது ஓட்டுநர் உரிமம் பறிக்கப்படும் என கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று வாகன புகை
சான்று விவகாரத்திலும் வந்தால்தான் சாத்தியம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT