Published : 22 Jun 2015 07:34 AM
Last Updated : 22 Jun 2015 07:34 AM

இந்து மதத்துக்கு மட்டும் சொந்தமானது அல்ல; உலகுக்கு இந்தியா அளித்த கொடை யோகா: மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பெருமிதம்

யோகா இந்து மதத்துக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அது உலகுக்கு இந்தியா அளித்த கொடை என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.

உலக யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா யோகா மையம் சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று யோகா விழா நடைபெற்றது. ஈஷா அறக்கட்டளையின் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் இதில் கலந்துகொண்டு ‘உப யோகம்’ என்ற ஆரம்ப நிலை யோகாசன பயிற்சியை அளித்தார் . 25 ஆயிரம் பேர் கலந்துகொண்ட இந்த யோகா பயிற்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் 47 முஸ்லிம் நாடுகள் உட்பட 177 நாடுகளில் யோகா தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் கண்டறியப்பட்ட யோகாசனத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்ள வேண்டிய விஷயமாகும்.

யோகா இந்து மதத்துக்கு சொந்தமானது என்றும், அதனால்தான் அதனை பாஜக அரசு கொண்டாடுகிறது என்றும் சிலர் தவறாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். யோகா என்பது ஒரு குறிப்பிட்ட மதம், இனம், ஜாதிக்கு அப்பாற்றப்பட்டது. மனிதகுலம் முழுமைக்கும் சொந்தமானது. உலகுக்கு இந்தியா அளித்த கொடையே யோகா. இதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். யோகாவை தின மும் பயிற்சி செய்தால் உடலும், உள்ளமும் கட்டுக்குள் வரும். வாழ்வில் ஒழுக்கமும், கட்டுப்பாடும் வளரும். இதனால் மகிழ்ச்சியான வாழ்வு வசப்படும்.

இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசியதாவது:

யோகா என்பது அனைவருக்கும் பொதுவானது. குழந்தைகள் எப்படி வேண்டுமானாலும் உடலை வளைப்பார்கள். எப்படி வேண்டுமானாலும் அவர்களால் உட்கார முடியும். ஆனால், வயதாக ஆக இறப்புக்கு நம்மை தயார்படுத்தி வருகிறோம். அதனால் பலர் தரையில் உட்காரக்கூட முடியாமல் பாதி உயிர் போனது போல் வாழ்கின்றனர். இந்த நிலையில் இருந்து நம்மை மீட்டு குழந்தை கள் போல சுறுசுறுப்பாக உற்சாகமாக இருக்க யோகாசனம் உதவுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகாலையில் திரண்ட 25,000 பேர்

யோகா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கல்லூரி மாணவிகள், பாஜகவினர், ஈஷா யோகா மையத்தினர் என நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அதிகாலையிலேயே சுமார் 25,000 பேர் திரண்டனர்.

காலை 6.15 மணிக்கு கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் இசை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.

மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, தமிழக பாஜக தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன், எஸ்.மோகன்ராஜூலு, வானதி சீனிவாசன் ஆகியோர் முதல் வரிசையில் அமர்ந்து யோகாசனம் செய்தனர்.

விழாவில் ‘மனதை கையாளும் தந்திரம்’ என்ற நூலை சத்குரு ஜக்கி வாசுதேவ் வெளியிட வெங்கய்ய நாயுடு பெற்றுக் கொண்டார். ‘யோகா டூல்ஸ்’ என்ற ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனை திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தொடங்கி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x