Last Updated : 25 Jun, 2015 11:59 AM

 

Published : 25 Jun 2015 11:59 AM
Last Updated : 25 Jun 2015 11:59 AM

அவுரி, நித்யகல்யாணிக்கு உரிய விலையில்லை: மூலிகை வாரியம் ஏற்படுத்தி கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமே அதிகமாக சாகுபடி செய்யப்படும் மூலிகைப் பயிர்களான அவுரி, நித்யகல்யாணிக்கு உரிய விலை கிடைக்காததால் மூலிகை வாரியம் ஏற்படுத்தி அரசே கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலிகை பயிர்களான அவுரி, நித்யகல்யாணி ஆகியவை இந்தி யாவில் மட்டுமே வளரக்கூடிய சிறப்புக்குரிய தாவரங்கள். ஹேர்-டை தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்களில் அவுரி இலைகள் முக்கியமானதாக சேர்க்கப்படுகிறது. காரணம், அவுரி இலை சேர்க்கப்படுவதால் அதிக நிறம் கிடைப்பதோடு, பக்கவிளைவுகளையும் ஏற்படுத்து வதில்லை. இதேபோன்று நித்ய கல்யாணி செடியின் அனைத்து பாகங்களும் மூலிகையாகும். இவை ரத்தப் புற்றுநோய்க்கான மாத்திரை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

கரிசல் மண்ணில் மட்டுமே அவுரி விளையும் என்பதால் விருது நகர், வெம்பக்கோட்டை, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே சாகுபடி செய்யப்படுகின்றன. மானாவாரி பயிரான அவுரி ஆடி, ஆவணி மாதங்களில் நல்ல விளைச்சலைத் தரும்.

அவுரி பயிருக்கு எந்த உரமும், பூச்சி மருந்தும் தேவையில்லை. ஆடு, மாடு போன்ற கால்நடைகள் உண்ணாது. மேலும் ஒரே ஒருமுறை மட்டும் களை பறித்தால் போதுமானது. மண் வளத்தைக் காப்பதிலும் அவுரி சிறந்த பயிர்.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆயிரம் ஏக்கர் பரப் பளவில் சாகுபடி செய்யப்பட்ட அவுரி சாகுபடி இந்த ஆண்டு பாதியாகக் குறைந்துள்ளது. கிலோ ரூ.100 வரை விற்பனையான அவுரி இலை தற்போது கிலோ ரூ.45-க்கு மட்டுமே ஏற்றுமதி நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படுகிறது.

இதேபோன்று, நித்யகல்யாணி விருதுநகர் மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டில் சாகுபடி பரப்பு பாதியாகக் குறைந்துள்ளது. இப்பயிரையும் ஆடு, மாடுகள் உண்ணாது, கசப்புத் தன்மை அதிகம் என்பதால் பூச்சி தாக்குதலும் இருக்காது. ஏற்றுமதியாளர்களால் ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை கொள்முதல் செய்யப்படும் நித்யகல்யாணி சில ஆண்டுகளுக்கு முன் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரை விலைபோனது.

இதுகுறித்து ஆமத்தூர் அருகேயுள்ள தவசிலிங்கபுரத்தைச் சேர்ந்த விவசாயி பெருமாள் கூறுகையில், அவுரிக்கும், நித்யகல்யாணிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நல்ல விலை கிடைத்தது. இப்போது மிகக் குறைந்த விலையே கிடைப்பதால் பயிர் செய்யும் விவசாயிகளிடம் ஆர்வம் குறைந்துவிட்டது. இதனால் சாகுபடி பரப்பும் குறைந்துவிட்டது. ஏற்றுமதி நிறுவனத்தினர் எப்போது வந்து கொள்முதல் செய்வார்கள் என்பதும் தெரிவதில்லை என்றார்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமச்சந்திர ராஜா கூறுகையில், அவுரி, நித்யகல்யாணி சாகுபடி செய் யும் விவசாயிகள் ஏற்றுமதி நிறுவனங்களையும், அதன் ஏஜெண்டுகளையும் நம்பியே அறுவடைக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. உரிய விலை கிடைக்காததால் விவசாயிகளிடம் மூலிகை பயிர்கள் சாகுபடி செய்வதில் ஆர்வம் குறைந்து வருகிறது.

எனவே, தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல் கொள்முதல் செய் வதுபோல, மருத்துவ குணங்கள் கொண்ட சிறப்புமிக்க மூலிகை பயிர்களான அவுரி, நித்யகல்யாணி உள்ளிட்டவற்றை மூலிகை வாரியம் தொடங்கி அரசே கொள்முதல்செய்ய வேண்டும். இல்லையெனில், தற்போது இருக்கும் மூலிகைப் பயிர்களும் காலப்போக்கில் அழிந்துவிடும் சூழல் உருவாகிவிடும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x